அமராவதி வியாபாரிகள் நலச்சங்க பொதுக்குழு கூட்டம்கரூர் அமராவதி வியாபாரிகள் நலச்சங்க, இரண்டாவது பொதுக்குழு கூட்டம், தலைவர் வெங்கட்ராமன் தலைமையில் நடந்தது.அதில், திருச்சி, கரூர்-கோவை ஆறு வழிச் சாலை பணியை, விரைவாக தொடங்கி முடிக்க வேண்டும். உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தில் உள்ள, கடுமையான சரத்துக்களை நீக்க வேண்டும். கரூர் மாநகராட்சி பகுதியில் உள்ள, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அரிசிக்கு விதித்துள்ள, 5 சதவீத ஜி.எஸ்.டி., யை மத்திய அரசு நீக்க வேண்டும். 10 ரூபாய் நாணயத்தை பஸ்களில் கண்டக்டர்கள் வாங்கி கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.சங்க துணைத்தலைவர்கள் தெய்வ சேனாதிபதி, முத்துராமன், செயலாளர் சிவசங்கர், இணை செயலாளர் செல்வம், துணை செயலாளர் சந்தோஷ், பொருளாளர் மகேஷ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.ஆரம்ப சுகாதார நிலையத்தில்கலெக்டர் ஆய்வுகரூர் மாவட்டம் கோடாங்கிபட்டி மணல்மேடு, வாங்கல் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் தங்கவேல் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மக்களை தேடி மருத்துவம் திட்ட பணிகள், மகப்பேறு, புற நோயாளிகள் பிரிவு, ரத்த பரிசோதனை, பிரிவு அனைத்து விதமான முதல் உதவி சிகிச்சை, பதிவேடுகள் மருந்துகள் இருப்பு, மற்றும் நாய் கடி, பாம்பு கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் மருந்துகளின் இருப்பு ஆகியவற்றை கேட்டறிந்தார். தாளப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மணல்மேடு பகுதியில் நடமாடும் மருத்துவ குழு பணி மேற்கொள்வதை பார்வையிட்டு அதன் திட்ட பணிகள் குறித்து விளக்கம் கேட்டார். தொடர்ந்து, 12 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார். சுகாதார பணிகள் துணை இயக்குனர் சந்தோஷ் குமார், வட்டார மருத்துவ அலுவலர்கள் கார்த்திக், சத்தியேந்திரன், ஆன்ரோ, கரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி உள்பட பலர் பங்கேற்றனர்.அரசு மேல்நிலைப்பள்ளியில் கல்விச்சீர் வழங்கும் விழாகரூர் பெரியகுளத்துப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கல்விச்சீர் வழங்கும் விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் மஞ்சுளா தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் திரிபுரசுந்தரி மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், பெற்றோர், பள்ளிக்குத் தேவையான பொருள்களை சீராக எடுத்து வந்தனர். பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.பட்டதாரி ஆசிரியர் தண்டபாணி, மாநகராட்சி கவுன்சிலர் வடிவேலரசு உள்பட பலர் பங்கேற்றனர்.-திருட்டு போன மொபைல் போன்கள் ஒப்படைப்புதிருட்டு போன மொபைல் போன்கள், உரியவர்களிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டன.கரூர் மாவட்ட, சைபர் கிரைம் போலீசார் மூலம், விசாரணை நடத்தப்பட்டு, திருட்டு போன, 54 லட்சம் ரூபாய் மதிப்புடைய, 311 மொபைல் போன்கள் சமீபத்தில் மீட்கப்பட்டன. அந்த மொபைல் போன்களை, உரியவர்களிடம் ஒப்படைக்கும், நிகழ்ச்சி நேற்று கரூர் எஸ்.பி., அலுவலகத்தில் நடந்தது. எஸ்.பி., பிரபாகர் மொபைல் போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார். மேலும், பல்வேறு ஆன்லைன் தொடர்புகள் மூலம், பணத்தை இழந்த, ஏழு பேருக்கு, ஒரு கோடியே, ஏழு லட்ச ரூபாயும் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.ஏ.டி.எஸ்.பி., பிரமானந்தன், சைபர் கிரைம் பிரிவு இன்ஸ்பெக்டர் அம்ச வேணி, எஸ்.ஐ., சுதர்சனம், தனிப்பிரிவு எஸ்.ஐ., ராஜசேர்வை உள்பட, பலர் பங்கேற்றனர்.மின்சாரம் பாய்ந்து விவசாயி பலிகுளித்தலை அடுத்த பிள்ளப்பாளையம் பஞ்., வீரக்குமாரன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து, 47; விவசாய கூலித்தொழிலாளி. இவர், மறைந்த கிருஷ்ணராயபுரம், தி.மு.க., ஒன்றிய செயலாளர் உமாபதி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்திற்கு, கடந்த, 15 ஆண்டுகளுக்கும் மேலாக தண்ணீர் பாய்ச்சுதல், பராமரிப்பு போன்ற வேலைகளை செய்து வந்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம் காலை, வழக்கம்போல் திம்மாச்சிபுரம் நடுக்கரையில் உள்ள தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். ஆனால், வெகு நேரமாகியும் வீட்டுக்கு வராததால், மாலையில் தோட்டத்துக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது, அந்த தோட்டத்திற்கு அருகே உள்ள, சுரேஷ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள மின்மோட்டார் சுவிட்ச்சை, 'ஆன்' செய்ய முயன்றபோது, மின்சாரம் தாக்கி உயிரிழந்து கிடந்தது தெரிய வந்தது.தகவலறிந்த லாலாப்பேட்டை போலீசார், சடலத்தை மீட்டு குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மாரிமுத்துவின் மனைவி மாலதி, 42, கொடுத்த புகார்படி, லாலாப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர். தனியார் பள்ளி ஆசிரியைவீட்டில் தங்க நகை திருட்டுவேலாயுதம்பாளையம் அருகே, தனியார் பள்ளி ஆசிரியை வீட்டில் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் திருடு போயின.கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் புகழூர் மல்லிகை நகர் பகுதியை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி, 55; டி.என்.பி.எல்., பள்ளி ஆசிரியை. இவர் கடந்த, 22 ல் வீட்டை பூட்டி விட்டு, பள்ளிக்கு சென்றுள்ளார். மாலை வீட்டுக்கு திரும்பிய போது கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும், பீரோவில் வைக்கப்பட்டிருந்த, ஆறு பவுன் தங்க நகை, 380 கிராம் வெள்ளி பாத்திரங்களை காணவில்லை. மர்ம மனிதர்கள் திருடி சென்றுள்ளனர். உமா மகேஸ்வரி போலீசில் புகார் அளித்துள்ளார். வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.கிருஷ்ணராயபுரம் யூனியனில்கொள்ளு அறுவடை தீவிரம்கிருஷ்ணராயபுரம், ஜன. 28-கிருஷ்ணராயபுரம் யூனியனில், மானாவாரி நிலத்தில் சாகுபடி செய்யப்பட்ட கொள்ளு செடிகளை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டனர்.கிருஷ்ணராயபுரம் யூனியனுக்குட்பட்ட புனவாசிப்பட்டி, மேட்டுப்பட்டி, வரகூர், குழந்தைப்பட்டி, வேங்காம்பட்டி, பாலப்பட்டி, மத்திப்பட்டி, அந்தரப்பட்டி, வயலுார், லட்சுமணம்பட்டி ஆகிய பகுதிகளில், மானாவாரி நிலங்களில் விவசாயிகள் பரவலாக கொள்ளு சாகுபடி செய்துள்ளனர். கடந்த மாதம் பெய்த மழையால், கொள்ளு செடிகளுக்கு போதுமான தண்ணீர் கிடைத்தது. இதனால், பூக்கள் பிடித்து நல்ல விளைச்சல் கண்டுள்ளது. விளைந்த கொள்ளு செடிகளை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அறுவடை செய்த கொள்ளை தரம் பிரிப்பதற்காக, வெயிலில் உலர்த்தும் பணி நடந்து வருகிறது.சந்தையூர் வாரச்சந்தையில்ஆடு, கோழி விற்பனை ஜோர்சந்தையூர் வாரச்சந்தையில் ஆடு, கோழி விற்பனை ஜோராக நடந்தது.கிருஷ்ணராயபுரம் அடுத்த சிவாயம் பஞ்.,க்குட்பட்ட இரும்பூதிப்பட்டி சந்தையூரில் வாரச்சந்தை, சனிக்கிழமை தோறும் கூடுகிறது. இந்த சந்தையில் காய்கறி, ஆடு, கோழிகள் விற்பனை செய்யப்படுகிறது. கிராமங்களில் உள்ள விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் ஆடு, கோழிகளை சந்தையில் கொண்டுவந்து விற்பனை செய்கின்றனர். அதன்படி, நேற்று கூடிய சந்தையில், 8 கிலோ கொண்ட ஆடு, 6,000 ரூபாய், நாட்டுக்கோழி கிலோ, 370 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. கரூர், சேங்கல், சந்தியமங்களம், குளித்தலை, தோகைமலை, பஞ்சப்பட்டி, ஆகிய பகுதியில் இருந்து வியாபாரிகள் திரளானோர் வந்து வாங்கி சென்றனர்.மின் மயானம் அமைக்கபொதுமக்கள் வேண்டுகோள்அரவக்குறிச்சி யூனியனில், அரவக்குறிச்சி டவுன் பஞ்., பள்ளப்பட்டி நகராட்சி மற்றும் 20 பஞ்., பகுதிகள் உள்ளன. இவற்றைச் சுற்றி நுாற்றுக்கணக்கான கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில் உயிரிழந்தோரின் உடல்களை தகனம் செய்ய மின் மயான வசதி இல்லை. இதனால், 40 கி.மீ., தொலைவில் உள்ள கரூருக்கு கொண்டு சென்று அங்குள்ள மின் மயானத்தில் தகனம் செய்ய வேண்டி உள்ளது. இதற்கு பல மணி நேரம் ஆவதால் இறந்தவர்களின் குடும்பத்தினர் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன் கருதி அரவக்குறிச்சி பகுதியை மையமாக கொண்டு அரசு மின் மயானம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.அரசு பஸ் மீது ஆம்புலன்ஸ் மோதல்: டிரைவர் காயம்கரூர் அருகே பாலம்மாள்புரம் பகுதியை சேர்ந்தவர் பூபதி, 23; ஆம்புலன்ஸ் வேன் டிரைவர். இவர் நேற்று மதியம், வாங்கல் சாலை அண்ணாவளைவு பகுதியில், ஆம்புலன்ஸ் வேனை ஓட்டிச்சென்றார். அப்போது, ஆம்புலன்ஸ் வேன் திடீரென நிலை தடுமாறி, எதிரே பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்த அரசு பஸ்சின் முன் பகுதியில் மோதியது. அதில், ஆம்புன்ஸ்ன் டிரைவர் பூபதிக்கு காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் பூபதியை மீட்டு, தனியார் மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர். கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.பத்திரப்பதிவு அலுவலக கட்டுமான பணி துவக்கம்குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்றம், போலீஸ் ஸ்டேஷன் அருகே நுாற்றாண்டு கடந்த பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட்டு வந்தது. தற்போது, இந்த கட்டடம் பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதமடைந்ததால், புதிய கட்டடம் கட்ட, 2.20 கோடி ரூபாய் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி, நேற்று முன்தினம், புதிய பத்திரப்பதிவு அலுவலக கட்டட கட்டுமான பணிக்கு பூமி பூஜை விழா நடந்தது. எம்.எல்.ஏ., மாணிக்கம் தலைமை வகித்து, பணியை தொடங்கி வைத்தார். நகராட்சி தலைவர் சகுந்தலா, அரசு வக்கீல் சாகுல், நகர துணைச்செயலாளர் செந்தில், பொருளாளர் தமிழரசன், பொறியாளர் அணி அமைப்பாளர் கணேசன், அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், தி.மு.க.,வினர் கலந்துகொண்டனர்.ஓட்டுப்பதிவு மாதிரி விழிப்புணர்வுகரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், வரும் லோக்சபா தேர்தலில் வாக்காளர்கள் எவ்வாறு தங்களது ஓட்டுகளை பதிவு செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளும் வகையில், கிராம பஞ்சாயத்துகளில் விழிப்புணர்வு வாகனம் மூலம் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. இதில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் மூலம் எவ்வாறு ஓட்டுப்பதிவு செய்வது என்பது குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. வாக்காளர்களின் ஓட்டுப்பதிவு அவசியம் குறித்தும் தெரிவிக்கப்பட்டது. இப்பணிகளில் தேர்தல் களப்பணியாளர்கள் ஈடுபட்டனர்.தே.மு.தி.க., சார்பில் அமைதி பேரணிகரூர் மாவட்ட தே.மு.தி.க., சார்பில், அமைதி பேரணி நேற்று நடந்தது.தே.மு.தி.க., நிறுவன தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்தின், 30 வது நாள் நினைவு தினம் நேற்று, தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. அதையொட்டி, கரூர் மனோகரா கார்னர் பகுதியில் இருந்து, கொங்கு திருமண மண்டபம் வரை அமைதி பேரணி மாநகர் மாவட்ட தே.மு.தி.க., செயலாளர் அரவை முத்து தலைமையில் நடந்தது. பின்னர் விஜயகாந்த் உருவ படத்துக்கு, தே.மு.தி.க., மற்றும் பல்வேறு கட்சியினர் மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். அ.தி.மு.க., சார்பில், எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளர் சிவசாமி, பகுதி செயலாளர் சேரன் பழனிசாமி, மக்கள் நீதி மய்யம் சார்பில் மோகன்ராஜ், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை (த) சார்பில் அருள் உள்பட பலர் பங்கேற்றனர்.ஆசிரியர் இயக்கங்கள் கூட்டு நடவடிக்கை குழு உண்ணாவிரதம்தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்கள் கூட்டு நடவடிக்கை குழு, கரூர் மாவட்ட கிளை சார்பில், செயலாளர் பெரியசாமி தலைமையில், தலைமை தபால் நிலையம் முன், நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.இடைநிலை ஆசிரியருக்கு, மத்திய அரசுக்கு இணையான ஊதியம், மூன்று நபர் குழு மூலம் தீர்வு காண வேண்டும். 2019 ல் ஜாக்டோ-ஜியோ போராட்ட வழக்கு நிலுவை குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய வேண்டும். தர ஊதியம், 5,400 ரூபாய் தணிக்கை தடையை நீக்க வேண்டும் ஆசிரியர்களை கருத்தாளர்களாக அனுப்பும் முறையை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட, 12 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.போராட்டத்தில், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் மணிகண்டன், தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு உறுப்பினர் மணிகண்டன் உள்பட, பலர் பங்கேற்றனர்.குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவிலில்தைப்பூச விழாவால் வியாபாரிகள் மகிழ்ச்சிகுளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவிலில் திருப்பணிகள் நடந்து வருவதால், தைப்பூச திருவிழா ரத்து செய்யப்படுவதாக, கோவில் செயல் அலுவலர் மூலம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, பா.ஜ., இந்து முன்னணி சார்பில், ஹிந்து சமய அறநிலையத்துறையை கண்டித்தும், திருவிழா தொடர்ந்து நடத்தக்கோரியும் போராட்டம் நடந்தது. மேலும், பல்வேறு அமைப்பினர் கண்டன போஸ்டர்கள் ஒட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்து முன்னனி சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து நீதிமன்ற வழிகாட்டுதல்படி, மீண்டும் தைப்பூச திருவிழா நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டது. இந்த திருவிழாவின் போது பல்வேறு மாவட்டத்தில் இருந்து பல்வேறு வியாபாரிகள் கடைகள் அமைத்து, தங்களது பொருட்கள் விற்பனை செய்வது வழக்கம். இருப்பினும், பல்வேறு இழுபறிக்குப்பின் கைவினை பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், தின்பண்டம், கரும்பு, அழகு சாதன பொருட்கள் கடைகள் அமைக்கப் பட்டன. தைப்பூசம் மற்றும் அதை தொடர்ந்து தொடர் விடுமுறையால், வழக்கத்திற்கு மாறாக அதிகளவு பொதுமக்கள் இந்த திருவிழாவில் கலந்துகொண்டனர். இதனால் கடைகள் அமைத்த வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைத்ததால், மகிழ்ச்சி அடைந்தனர்.அன்னை வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் குடியரசு தின விழாகரூர் வெங்கமேடு ஸ்ரீ அன்னை வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், குடியரசு தின விழா நடந்தது.அதில், ஸ்ரீ அக்னீஸ் கல்வி குழும தலைவரும், பள்ளி நிறுவனருமான மணிவண்ணன், தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது. பள்ளி தாளாளர் கீதா மணிவண்ணன், பள்ளி முதல்வர் பகலவன், சிறப்பு விருந்தினர்களாக சூரியகுமார், புஷ்பராஜன், நாகராஜன், ரமேஷ், வினோத், பிஷ்மா, கார்த்திகேயன் உள்பட பலர் பங்கேற்றனர்.அதிகரிக்கும் வாகன போக்குவரத்துவாங்கல் சாலை விரிவுபடுத்தப்படுமா?கரூர் - வாங்கல் சாலையில், போக்குவரத்து அதிகரித்து விட்டதால், சாலையை அகலப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.கரூர் மாவட்டம் வாங்கல், நாமக்கல் மாவட்டம் மோகனுார் பகுதியைஇணைக்கும் வகையில், காவிரி ஆற்றின் குறுக்கே கடந்த, 2016ல் உயர்மட்ட பாலம் திறக்கப்பட்டது. கரூரில் இருந்து, மோனுார் வழியாக நாமக்கல்லுக்கு அதிக அளவில் வாகனங்கள் செல்கின்றன. அதே போல், மோகனுாரில் இருந்து திருச்சிக்கு, வாங்கல் வழியாக வாகனங்கள் செல்கின்றன. இதனால், கரூர் - வாங்கல் சாலையில், இரவு பகலாக ஏராளமான வாகனங்கள் சென்ற வண்ணம் உள்ளன. ஆனால், இச்சாலை குறுகிய அளவில், இருப்பதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளும் ஏற்படுகின்றன. குறிப்பாக, வாங்கல் கடைவீதி பகுதியில், சாலை குறுகிய அளவில் உள்ளதால், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். அப்பகுதியில், 100 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளதால், சிறுவர், சிறுமியரை வெளியே விடவே பெற்றோர் அச்சப்படுகின்றனர். வாங்கல் சாலை, கடைவீதி பகுதிகளில், சாலையை அகலப்படுத்த, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.