பி.வெள்ளாளப்பட்டி வழியாக பஸ்களை இயக்க மக்கள் மனு
கரூர், பி.வெள்ளாளப்பட்டி அடுக்குமாடி குடியிருப்பு வழியாக, அரசு டவுன் பஸ்களை இயக்க வேண்டும் என, புலியூர் அடுக்குமாடி குடியிருப்போர் நலச்சங்கத்தினர், கரூர் மண்டல போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர்.அதில் கூறியிருப்பதாவது:கரூர் மாவட்டம், புலியூர் அருகே பி.வெள்ளாளப்பட்டியில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாடு வாரியத்தால், அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. 120 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆனால், பி.வெள்ளாப்பட்டி வழியாக, பஸ் வசதி இல்லை. இதனால், அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள், இரண்டு கி.மீ., துாரம் நடந்து புலியூருக்கு சென்று பஸ்சில் செல்ல வேண்டும். கல்லுாரி, பள்ளி மாணவ, மாணவியர், முதியவர்கள் அவதிப்படுகின்றனர்.இதனால், கரூரில் இருந்து புலியூர் பி.வெள்ளாளப்பட்டி வழியாக, அரசு டவுன் பஸ்களை இயக்க வேண்டும்.இந்த வழியாக பஸ் இயக்கினால், பி.வெள்ளாப்பட்டிக்கு அருகில் உள்ள சீத்தப்பட்டி, தாளப்பட்டி பகுதி பொது மக்களும் பயன் அடைவர்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.