சாலையின் நடுவே பள்ளம்: வாகன ஓட்டிகள் அவதி
கரூர், : கரூர்-திருச்சி சாலையில், புலியூர் அருகில் பள்ளம் இருப்பதால், வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.கரூர்-திருச்சி சாலையில், தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இதில் திருச்சி, தஞ்சாவூர் பஸ்கள் மட்டுமின்றி பள்ளி, கல்லுாரி வாகனங்களும் சென்று வருகின்றன. புலியூர் தனியார் பொறியியல் கல்லுாரி அருகில், கரூர்-திருச்சி சாலை நடுவில், காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய் செல்கிறது. இதில், உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருகிறது.சாலையில் தண்ணீர் ஓடுகிறது. மேலும் சாலையில் அரிப்பு காரணமாக பள்ளம் ஏற்பட்டு உள்ளது. சாலை நடுவே பள்ளம் இருப்பதே, தெரியாத நிலையில் இருப்பதால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விழுந்து விடுகின்றனர். இரவு நேரங்களில் பெரும் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. முக்கியமான சாலை என்பதால், போக்குவரத்து அதிகம் இருக்கும். இதனால், வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்த போது பின்னால், வரும் வாகனம் மோதி உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.உடனடியாக குடிநீர் குழாயை சரி செய்து, சாலை நடுவில் உள்ள பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.