கரூர், கரூர் அருகே, மழைநீர் வடிகால் வாய்க்காலில் முளைத்துள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.கரூர்-வெள்ளியணை சாலை, தான்தோன்றிமலை சிவாஜி நகர் பகுதியில், மழைநீர் வடிகால் வாய்க்கால் செல்கிறது. அந்த வாய்க்கால் கரை பகுதியில், மின் கம்பங்களும் உள்ளன. இந்நிலையில், மழை நீர் வடிகால் வாய்க்காலில் அதிகளவில், செடி கொடிகள் முளைத்துள்ளன. தான்தோன்றிமலை மற்றும் சுற்று வட்டார பகுதியில் மழை பெய்யும் போது, வடிகால் வாய்க்கால் நிரம்பி, குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் ஓடுகிறது. இதனால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்படுகின்றனர். தற்போது, கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், மழை பெய்ய துவங்கிய நிலையில், மழைநீர் வடிகால் வாய்க்காலை துார் வார வேண்டும் என, தான்தோன்றிமலை சிவாஜி நகர் பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.ஆனால், மழைநீர் வடிகால் வாய்க்கால் துார் வாரப்படவில்லை. வரும் நாட்களில், தான்தோன்றிமலை பகுதியில், அதிகளவில் மழை பெய்யும் போது, வடிகால் வாய்க்கால் நிரம்பி, மீண்டும் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் ஓடும் அபாயம் உள்ளது.எனவே, கரூர்-வெள்ளியணை சாலை தான்தோன்றிமலை பகுதி, சிவாஜி நகரில் உள்ள மழைநீர் வடிகால் வாய்க்காலை துார் வார, கரூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.