வெஞ்சமாங்கூடலுாரில் வெறிநாய் அட்டகாசம்; 12 ஆடுகள் பலி
அரவக்குறிச்சி:அரவக்குறிச்சி அருகே, வெஞ்சமாங்ககூடலுாரில் வெறிநாய் கடித்து, 12 ஆடுகள் பலியானதுடன், 15 ஆடுகள் உயிருக்கு போராடி வருகின்றன.அரவக்குறிச்சி அருகே, வெஞ்சமாங்கூடலுார் மேல்பாகம் கிராமம் பாறை தோட்டத்தை சேர்ந்தவர் சுந்தரம். இவர் தனது பட்டியில், 50க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை சுந்தரத்தின் மகன் நல்லசிவம் பட்டியில் இருந்த ஆடுகளை திறந்த விடச் சென்றுள்ளார். அப்போது, 8 ஆடுகள் இறந்தும், 19 ஆடுகள் உயிருக்கு போராடிக் கொண்டும் இருந்துள்ளது. சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.இதையடுத்து, கிராம நிர்வாக அலுவலர் கால்நடை மருத்துவர் குழுவினருடன் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்பு இரவு நேரத்தில் நான்கு ஆடுகள் இறந்துள்ளன, தற்போது, 15 ஆடுகள் உயிருக்கு போராடி வருகின்றன. வெறி நாய்கள் தொல்லையால், அரவக்குறிச்சி சுற்றுவட்டார கால்நடைகள் பாதிக்கப்பட்டு வருவது தொடர் கதையாகி உள்ளது. இதை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, வெறி நாய்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.