உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வெற்றிலை, வாழைத்தார் விற்பனை; விவசாயிகள் மகிழ்ச்சி

வெற்றிலை, வாழைத்தார் விற்பனை; விவசாயிகள் மகிழ்ச்சி

வெற்றிலை, வாழைத்தார் விற்பனை; விவசாயிகள் மகிழ்ச்சிகுளித்தலை, அக். 11-குளித்தலை, கிருஷ்ணராயபுரம் பகுதியில் ஆயுத பூஜையால் வாழைத்தார்கள் விலை உயர்ந்ததால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.குளித்தலை, கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தப்படியாக வாழை, வெற்றிலை விவசாயம் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு ஏற்பட்ட தண்ணீர் பிரச்னையால், வாழை சாகுபடி பாதியாக குறைந்தது.ஆனால், கடந்த ஆண்டு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டாலும் போர்வெல்களை வைத்து வெற்றிலை சாகுபடி தொடர்ந்ததால் உற்பத்தி அதிகரித்தது. தற்போது பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், வாழை சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.வாழை சாகுபடி குறைந்த போதிலும், ஓரளவு தான் விலை கிடைத்து வந்தது. நாடு முழுவதும் ஆயுத பூஜை விழா இன்று கொண்டாடப்படுகிறது. சிறிய தொழில் செய்பவர்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை, விழாவை கோலாகலமாக கொண்டாடுவர். நேற்றைய லாலாபேட்டை மார்க்கெட் நிலவரப்படி பூவன் ரக வாழைத்தார் முதல் ரகம், 900 ரூபாய்க்கு ஏலம் போனது. குறைந்தபட்சம், 250 ரூபாய் முதல் ஏலம் போனது. ரஸ்தாளி வாழைத்தார், 750 ரூபாய்க்கு விற்பனையானது. கற்பூரவள்ளி ரக வாழைத்தார், 500 ரூபாய்க்கு விற்றது. வாழைத்தார்கள் விலை உச்சத்தை தொட்டதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.வெற்றிலை விவசாயிகள் மகிழ்ச்சி கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில், வெற்றிலை உற்பத்தி அதிகரித்துள்ளதால், கடந்த சில மாதங்களாக போதியளவு விலை இல்லாமல் விவசாயிகள் புலம்பி வந்தனர். இந்நிலையில், கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில், கடந்த இரண்டு நாட்களாக மழை கொட்டி தீர்த்தது. மழை பெய்ததால் கொடிக்கால் வயல்களில் இறங்கி வெற்றிலை பறிக்க முடியாது.அப்படி இறங்கி பறித்தால் பயிர்கள் வீணாக வாய்ப்பு உள்ளது. இதனால் சாதாரணமாக, 100 மூட்டை மார்க்கெட்டிற்கு வரும் என்றால், மழை பெய்துள்ளதால் 40, 50 மூட்டைகளே வந்துள்ளது என்கின்றனர் விவசாயிகள். மழை பெய்து வெற்றிலை வரவு குறைந்த நிலையில் விலை கணிசமாக உயர்ந்தது. நேற்றைய மார்க்கெட் நிலவரப்படி வெள்ளக்கொடி ரக வெற்றிலை இளம்பயிர் ஒரு மூட்டை, 7,500 முதல் 8,000 ரூபாய் வரை விற்பனையானது. முதியால் வெற்றிலை ஒரு மூட்டை 3,000 முதல், 4,000 ரூபாய் வரை விற்பனையானது. இதனால் வெற்றிலை விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.* மகிளிப்பட்டி, உடையந்தோட்டம், காட்டூர், செக்கணம், எழுதியாம்பட்டி, மாயனுார், தாளியாம்பட்டி, சேங்கல், கண்ணமுத்தாம்பட்டி பகுதிகளில் விவசாயிகள் பரவலாக பூக்கள் சாகுபடி செய்து வருகின்றனர். பூக்கள் சாகுபடிக்கு கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது.ஆயுத பூஜையை முன்னிட்டு விரிச்சிப்பூக்கள் கிலோ, 100 ரூபாயில் இருந்து 220 ரூபாய், சின்னரோஜா கிலோ, 90 ரூபாயில் இருந்து, 200 ரூபாய், செண்டு மல்லி பூக்கள் கிலோ, 30 ரூபாயில் இருந்து, 60 ரூபாய், கோழிக்கொண்டை பூக்கள், 50 ரூபாய்க்கு விற்கப்பட்டது. பூக்கள் விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி