மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நாய்கள் தொல்லையால் கடும் அச்சம்
கரூர், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், நாய்கள் அதிகளவில் உலா வருகிறது. இதனால் டாக்டர்கள், செவிலியர்கள், நோயாளிகள், துாய்மை பணியாளர்கள் அச்சப்படுகின்றனர்.கரூர் அருகே, காந்தி கிராமம் கொளந்தானுார் பகுதியில், மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில், 295.14 கோடி ரூபாய் செலவில், மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை கட்டப்பட்டு, 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். மேலும் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் துாய்மை பணியாளர்கள், 350 பேருக்கு மேல் பணிபுரிகின்றனர்.இந்நிலையில், மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், சவக்கிடங்குக்கு எதிரில் வாகனங்களை நிறுத்த, இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், நாய்கள் சுற்றித்திரிகின்றன. இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் பணிகளை முடித்து, வீடு திரும்பும் டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் வாகனங்களை எடுக்கும் போது, நாய்கள் துரத்துவதால் அச்சப்படுகின்றனர்.மேலும், மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை மற்றும் சாலைகளில், 50க்கும் மேற்பட்ட நாய்கள் உலா வருவதால் நோயாளிகள், அவர்களது உறவினர்களும் நாய்க்கடி பீதியில் உள்ளனர். எனவே, மருத்துவமனையில் சுற்றித்திரியும், நாய்களை பிடித்து, வேறு இடத்தில் கொண்டு விட, கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.