அஞ்சலகங்களில் வரும் 21ல் மென்பொருள் புதுப்பிக்கும் பணி: கண்காணிப்பாளர் தகவல்
கரூர்:குளித்தலை தலைமை அஞ்சல் அலுவலகம் உள்பட, ஆறு அஞ்சல் நிலையங்களில் வரும், 21ல் மென்பொருள் புதுப்பிப்பு பணி நடக்கிறது என, கரூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தமிழினி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அஞ்சல் துறை தனது அடுத்த தலைமுறை ஏ.பி.டி., பயன்பாட்டை வெளியிட உள்ளது. இது டிஜிட்டல் முன்னேற்றத்துக்கு முக்கியமானதாகும். இதனால், கரூர் கோட்டத்தில் குளித்தலை தலைமை தபால் நிலையம் உள்பட, ஆறு அஞ்சல் நிலையங்களில் வரும், 21ல் மென்பொருள் புதுப்பிக்கும் பணிகள் நடக்கிறது. இதன்மூலம்தான், புதிய ஏ.பி.டி., அமைப்பு திறம்பட செயல்பட முடியும். மக்களுக்கான சேவைகளை மேலும் மேம்படுத்திட, விரைவாக டிஜிட்டலாக உயர்த்திட இவை மேற்கொள்ளப்படுகிறது.இதனால், அன்றைய தினம் குளித்தலை உள்ளிட்ட, ஆறு அஞ்சல் நிலையங்களில் எந்த ஒரு அஞ்சல் பரிவர்த்தனையும் நடைபெறாது. வரும், 22 முதல் குளித்தலை உள்ளிட்ட, ஆறு அஞ்சல் அலுவலகங்களில் ஏ.பி.டி., அமைப்பு செயல்பட உள்ளது.இவ்வாறு கூறியுள்ளார்.