மாணவர்கள் குற்றச்செயல்களில் சிக்கினால் நற்சான்றிதழ் பெற முடியாது: டி.எஸ்.பி.,
குளித்தலை குளித்தலை அரசு கலை மற்றம் அறிவியல் கல்லுாரியில், போலீஸ் யூத் கிளப் மற்றும் சமூக நீதி மனித உரிமைகள் பிரிவு சார்பில், விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. போலீஸ் யூத் கிளப் ஒருங்கிணைப்பாளர் வைரமூர்த்தி வரவேற்றார். கல்லுாரி முதல்வர் சுஜாதா தலைமை வகித்தார். டி.எஸ்.பி., செந்தில்குமார் முன்னிலை வகித்தார். அவர் பேசுகையில், ''மாணவர்கள் கல்லுாரி படிக்கும்போது, வெளியில் நடக்கும் குற்றச்செயல்களில் தங்களின் அறியாமையால் மாட்டிக்கொள்ளக்கூடாது. அவ்வாறு நடந்தால், 'நற்சான்றிதழ்' பெற முடியாது. மேலும், அரசு பணிக்கு செல்வதில் சிக்கல் ஏற்படும். எனவே, மாணவர்கள் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும். குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை, அடையாளம் காட்டி போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பாதுகாப்புடன் கல்வி பயின்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும்,'' என்றார். மனித உரிமைகள் பிரிவு உதவி ஆய்வாளர் சதாசிவம் கருத்துரை வழங்கினார். தமிழாய்வுத்துறை தலைவர் ஜெகதீசன் விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார். மாவட்ட புள்ளியியல் ஆய்வாளர் பிரேம்குமார் நன்றி தெரிவித்தார்.