வீரகனுாரில் ஆடுக்கு ரூ.100 சுங்கம் வசூல் சந்தையை தெடாவூருக்கு மாற்றிய வியாபாரிகள்
தலைவாசல், தலைவாசல் அருகே வீரகனுாரில் சனிதோறும் ஆட்டுச்சந்தை கூடுகிறது. அங்கு ஆடுகளுக்கு தலா, 100 ரூபாய் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மற்ற சந்தைகளில், 50 முதல், 70 ரூபாய் உள்ள நிலையில், வீரகனுாரில் மட்டும், 100 ரூபாய் வசூலிப்பதால், கட்டணத்தை குறைக்க வியாபாரிகள் வலியுறுத்தி வந்தனர். ஆனால் கடந்த வார சந்தையின்போதும், 100 ரூபாய் வசூலித்ததால், வியாபாரிகள் வாக்குவாதம் செய்தும் குறைக்கவில்லை.இதனால் நேற்று முன்தினம் இரவே, தெடாவூர் டவுன் பஞ்சாயத்தில் ஆட்டுச்சந்தை நடத்த இடம் தயார்படுத்தினர். நேற்று காலை தெடாவூரில் சந்தை கூடியது. அங்கு ஒரு மாதத்துக்கு சுங்க கட்டணம் இல்லை என, தி.மு.க.,வை சேர்ந்த, டவுன் பஞ்சாயத்து தலைவர் வேலு தெரிவித்தார். சுற்றுவட்டார விவசாயிகள், 600க்கும் மேற்பட்ட ஆடுகளை, தெடாவூரில் விற்பனைக்கு கொண்டு வந்து வியாபாரம் செய்தனர். வீரகனுாருக்கு யாரும் செல்லாததால், அங்கு சந்தை செயல்படவில்லை. இதனால் வீரகனுார் சந்தையை சுங்கம் எடுத்தவர்கள், வீரகனுார் டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில், கலெக்டர் பிருந்தாதேவிக்கு புகார் அனுப்பினர். அதில், 'தெடாவூரில் அனுமதியின்றி சந்தை செயல்படுகிறது. வீரகனுாரில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கூறியிருந்தனர்.வியாபாரிகள் கூறுகையில், 'தெடாவூரில் குறைந்த சுங்க கட்டணத்தில் சந்தை நடத்துவதாக கூறியதால் அங்கு சென்றோம்' என்றனர்.தெடாவூர் டவுன் பஞ்சாயத்து தலைவர் வேலு கூறுகையில், ''இங்கு வருவாய் இனங்கள் இல்லை. 1997 முதல், 2000ம் வரை ஆட்டுச்சந்தை செயல்பட்டது. தற்போது கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம். போலீசாரிடம் தடையில்லா சான்று பெற்று வந்த நிலையில், வியாபாரிகள் கோரிக்கைப்படி, சந்தை தொடங்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்துக்கு பின், ஆடு - 20, கோழி - 10, மாடு - 40 ரூபாய் என சுங்க கட்டணம் வசூலிக்கப்படும்,'' என்றார்.