உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஜீப் வசதி இல்லாமல் திருச்சி மண்டல போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அவதி

ஜீப் வசதி இல்லாமல் திருச்சி மண்டல போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அவதி

கரூர்: திருச்சி மத்திய மண்டலத்தில், பல்வேறு பிரிவுகளை சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், ஜீப் வசதி இல்லாமல் அவதிப்படுகின்றனர். இந்நிலையில், புதிதாக தொடங்கப்பட்ட, சைபர் கிரைம் போலீசாருக்கு, ஜீப் வசதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.தமிழக காவல் துறையில், இன்ஸ்பெக்டர் அந்தஸ்து முதல் டி.ஜி.பி., வரை ஜீப், கார் ஆகிய வாகன வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. ஆனால், திருச்சி மத்திய மண்டல காவல் துறையில், பெரும்பாலான போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு, ஜீப் வசதி செய்து தரப்படவில்லை என்ற, அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.திருச்சி மத்திய மண்டல காவல் துறையின் கீழ், திருச்சி, தஞ்சாவூர் என, இரண்டு சரகங்கள் செயல்பட்டு வருகிறது. அதில் திருச்சி சரகத்தில், திருச்சி, கரூர், பெரம்பலுார், அரியலுார், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களும், தஞ்சாவூர் சரகத்தில் தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களும் அடங்கும்.அதில், சட்டம்-ஒழுங்கு, மதுவிலக்கு அமலாக்க பிரிவு, மகளிர் போலீஸ் ஸ்டேஷன் மற்றும் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர்களுக்கு மட்டும் ஜீப் வசதி உள்ளது. மாவட்ட குற்றப்பிரிவு, குற்ற ஆவண காப்பகம், குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு, சைபர் கிரைம், ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு, மாவட்ட ஆயுதப்படை பிரிவு, பெண்களுக்கு எதிரான குற்றம் தடுப்பு பிரிவு, கொடுங்குற்றம் தடுப்பு பிரிவு, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவுகளை சேர்ந்த, பெரும்பாலான இன்ஸ்பெக்டர்களுக்கு ஜீப் வசதி இல்லை.இதனால், வி.ஐ.பி., பாதுகாப்பு பணி, நீதிமன்ற பணி, போலீஸ் ஸ்டேஷன் ஆய்வு மற்றும் வெளி மாவட்ட பாதுகாப்பு பணிகளுக்கு போலீசாருடன், வேனில் இன்ஸ்பெக்டர்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும், சில பிரிவுகளை சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள் வாரன்ட் மூலம், அரசு பஸ்களில் பல்வேறு பணி நிமித்தமாக சென்று வருகின்றனர். குறிப்பாக, திருச்சி, தஞ்சாவூர் சரக, மாவட்டங்களில் உள்ள, பல்வேறு பிரிவுகளை சேர்ந்த இன்ஸ்பெக்டர்களுக்கு ஜீப் வசதி செய்து தரப்படவில்லை. இதனால், இன்ஸ்பெக்டர்கள் அதிருப்தியில் உள்ளனர்.இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: திருச்சி மத்திய மண்டல காவல் துறையில், போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு ஒதுக்கப்பட்ட வாகனங்களை, சில நேரங்களில் உயர் அதிகாரிகள் சிலர் அவர்களது சொந்த தேவைக்காக பயன்படுத்தி வருகின்றனர். இதனால், இன்ஸ்பெக்டர்களுக்கு வாகன வசதி கிடைப்பது இல்லை. வருமானம் மிகுந்த சட்டம்-ஒழுங்கு, மதுவிலக்கு பிரிவுக்கு, தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர்களுக்கு மட்டும், ஜீப் வசதியை வழங்குகின்றனர். மற்ற பிரிவு களை கண்டுகொள்வது இல்லை. அனைத்து பிரிவுகளை சேர்ந்த இன்ஸ்பெக்டர்களுக்கும், ஜீப் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை