கரூரில் மீண்டும் மெகா விளம்பர பேனர்கள் அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள்
கரூர், டிச. 25-கரூர் மாநகரை சுற்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்கள் காற்றில் பறந்து, எந்நேரமும் கீழே விழும் அபாயமுள்ளது. பெரும் விபரீதம் ஏற்படும் முன், விளம்பர பேனர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தனியார் கட்டடங்களில் வைக்கப்பட்டுள்ள மெகா பேனர்களால், பொது மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவானது. கரூர் மாநகராட்சி பகுதியில் சில இடங்களிலிருந்த மெகா பேனர்கள் அகற்றப்பட்டன. ஆனால், கரூரில் மீண்டும் வைக்கப்பட்டு வரும் மெகா விளம்பர பேனர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரூர் மாநகராட்சியின் பல்வேறு இடங்களிலும், மிக உயரமான கட்டடங்களிலும் விதிகளை மீறி மீண்டும் விளம்பர பேனர்கள் வைக்கப்படுகின்றன.கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கரூர் பஸ் ஸ்டாண்ட் மனோகரா ரவுண்டானாஅருகில் மாடியிலிருந்த பேனர் விழுந்து, இரண்டு பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அந்த சம்பவத்துக்கு பின் மாநகராட்சி ஊழியர்கள், அங்குள்ள பேனர்களை அகற்றினர். சில நாட்களுக்கு பின், விளம்பர பேனர்கள் மீண்டும் வைக்கப்பட்டு வருகின்றன. தற்போது பஸ் ஸ்டாண்ட், லைட் ஹவுஸ் கார்னர், சர்ச் கார்னர் உள்பட பல்வேறு பகுதிகளில் சிறியது முதல் மெகா சைஸ் வரை விளம்பர பேனர் வைக்கப்பட்டு உள்ளது. அவ்வப்போது, பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால், வாகன ஓட்டிகள் மீது விளம்பர பேனர்கள் விழும் அபாயம் உள்ளது. கோவையில், சாலையோரம் ராட்சத விளம்பர பேனர் சரிந்து விழுந்து மூன்று இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம், 2023 ஜூனில் நடந்தது. இதுபோன்று விளம்பர பேனரால் ஏற்படும் மரணங்கள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. எனவே, அனுமதி பெற்று அல்லது அனுமதி பெறாமல் என எப்படி வைத்திருந்தாலும் சரி, உயிர் பலிகளை தடுக்க மெகா விளம்பர பேனர்களை முற்றிலும் அகற்ற போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இது குறித்து கரூர் மாநகராட்சி கமிஷனர் சுதாவிடம் கேட்ட போது, ''மக்களுக்கு ஆபத்தான முறையில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.