நீச்சல் தெரியாமல் கிணற்றில் விழுந்த இளைஞர் உயிரிழப்பு
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி அருகே, நீச்சல் தெரியாமல் கிணற்றில் விழுந்த இளைஞர் உயிரிழந்தார். அரவக்குறிச்சி அருகே தடாகோவிலை அடுத்த கணக்குவேலம்பட்டியை சேர்ந்தவர் முத்துராஜ் மகன் சஞ்சய், 22. இவர் தனது நண்பர்களுடன், கிணற்றில் நீச்சல் பழகுவதற்காக நேற்று முன்தினம் மதியம், 2:00 மணியளவில் கணக்குவேலம்பட்டி பகுதியில் உள்ள கிணற்றுக்கு சென்றனர். அங்கு லாரி டியூபை பயன்படுத்தி நீச்சல் கற்றுள்ளனர். பின்னர் நண்பர்களுடன் திரும்பி வந்தவர், தனது பணப்பையை கிணற்றின் அருகே வைத்து விட்டதாக கூறி, மீண்டும் கிணற்றுக்கு சஞ்சய் சென்றுள்ளார்.நீண்ட நேரமாகியும் தனது மகன் வீட்டிற்கு வராததால், முத்துராஜ் கிணற்றின் அருகே சென்று பார்த்தபோது, மகனின் இரு சக்கர வாகனமும், பணப்பையும் அங்கு இருந்ததுள்ளது. அரவக்குறிச்சி தீயணைப்பு வீரர்கள், கிணற்றில் இறங்கி நீண்ட நேர தேடலுக்கு பின் சஞ்சயை சடலமாக மீட்டனர்.அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.