ஓசூர்: பாகலூர் ஹட்கோ தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளில் செப்டிக் டேங் கழிவுநீர் குழாய் உடைந்து தேங்குவதால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் கவுன்சிலர் தலைமையில், வீட்டு வசதி வாரிய அலுவலகத்திற்குள் புகுந்து கடும் ரகளையில் ஈடுப்பட்டனர்.ஓசூர் பாலூர் ஹட்கோவில், தமிழ்நாடு வீட்டுவசதிவாரியம் அலுவலகம் அருகே, பி1, பி2, பி3, டி6, டி7 மற்றும் டி8 பகுதியில் வீட்டுவசதி வாரியம், 25 ஆண்டுக்கு முன், 80க்கும் மேற்பட்ட வீடுகளை கட்டி விற்பனை செய்தனர்.இந்த குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் செப்டிக் டேங் கழிவு நீர், சாக்கடை நீர் மற்றும் மழை நீர் வீட்டுவசதிவாரியம் அலுவலகம் வழியாக, புறநகர் பகுதியில் உள்ள ராஜகால்வாய் பகுதியில் உள்ள கழிவுநீர் தொட்டியில் போய் சேருகிறது.பொதுவாக கழிவுநீர் குழாய் செல்லும் பகுதிக்கு மேல் கட்டிடம் எதுவும் கட்டக்கூடாது என்ற விதிமுறை உள்ளது. ஆனால், கடந்த இரு ஆண்டுக்கு முன், வீட்டுவசதிவாரியம் அலுவலகம் வழியாக சென்ற கழிவு நீர் குழாய்க்கு மேல், வீட்டுவசதிவாரியம் புது அலுவலக கட்டிடம் கட்டியது.இதனால், கழிவுநீர் குழாய் இருகி சேதமடைந்து பூமிக்கடியில் உடைந்து விட்டது. இதனால், பாகலூர் ஹட்கோவில், 80க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்து வெளியேறும் செப்டிக் டேங் கழிவுநீர், சாக்கடை நீர் ஆகியவை வெளியேற முடியாமல் குடியிருப்பு பகுதியிலும், சாலையிலும் தேங்கி நிற்கிறது. இதனால், அப்பகுதியில் கடும் தூர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.கழிவு நீர் தேங்கி நிற்பதால், அவற்றில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் நேற்று காலை கவுன்சிலர் ரமேஷ் தலைமையில், தமிழ்நாடு வீட்டுவசதிவாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.வீட்டுவசதிவாரிய அலுவலகத்திற்குள், கழிவுநீர் குழாய் உடைந்த பகுதியை பொதுமக்கள் பூமியை தோண்டி வீட்டுவசதிவாரிய அதிகாரிகளுக்கு காட்டினர். அவர்கள், செயற்பொறியாளர் இல்லாததால், எங்களால் நடவடிக்கை எடுக்க முடியாது என, தெரிவித்தனர்.ஆத்திரமடைந்த பொதுமக்கள் வீட்டுவசதிவாரிய அலுவலகத்திற்குள் புகுந்து கடும் ரகளையில் ஈடுப்பட்டனர். கோட்ட கணக்காளர் ராஜகோபால் அறைக்குள் புகுந்து அவரிடம் கவுன்சிலர் மற்றும் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனால், பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.பொதுமக்களை சமாதானம் செய்த அவர், உதவிபொறியாளர்கள் பிரபாகர், பழனியப்பன், அறிவழகன், ஆகியோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். உடைந்த குழாய்களை சீரமைத்து தருவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.செயற்பொறியாளர் சுப்பிரமணியம் இல்லாததால், எந்த முடிவு எடுக்கவும் எங்களுக்கு அதிகாரம் இல்லை, என திட்டவட்டமாக தெரிவித்தனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாதாதல், பொதுமக்கள் நான்கு நாட்களுக்குள் சரிசெய்ய நடவடிக்கை எடுக்காவிட்டால், சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபடபோடவாதாக தெரிவித்து விட்டு கலைந்து சென்றனர்.