போதையில் மாணவர் விடுதியில் கலாட்டா:மூன்று பேர் கைது
போதையில் மாணவர் விடுதியில் கலாட்டா:மூன்று பேர் கைதுபோச்சம்பள்ளி கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, நாகரசம்பட்டி அரசுப்பள்ளி எதிரில் எஸ்.டி., விடுதி செயல்பட்டு வருகிறது. 55க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியுள்ள நிலையில், தற்போது விடுதி பராமரிப்பு பணி மற்றும் பொதுத்தேர்வு நடந்து வருகிறது. இந்நிலையில், நாள் ஒன்றுக்கு 15, 20, 25 என மாறி மாறி மாணவர்கள் மதிய உணவு உள்ளிட்டவைகளை விடுதியில் தங்கி உணவு அருந்தி விட்டு, இரவு நேரத்தில் அவரவர் வீட்டிற்கு சென்று விடுகின்றனர்.கடந்த, 26ல் நாகரசம்பட்டியை சேர்ந்த மகேந்திரன், 58, தர்மலிங்கம், 55, கோவிந்தசாமி, 52, ஆகிய மூன்று பேரும் குடிபோதையில் விடுதிக்கு சென்று, இன்றைக்கு என்ன சாப்பாடு போட்டாய், சாப்பாட்டின் லிஸ்ட் (மெனு) கார்டு கேட்டு அங்கு பணியில் இருந்த சமையலர் சசிகுமாரிடம் ஒருமையில் பேசி தகாத வார்த்தையில் திட்டியுள்ளனர். சசிகுமார் அளித்த புகார்படி, எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை சட்டத்தின் கீழ், நாகரசம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து, மகேந்திரன், தர்மலிங்கம், கோவிந்தசாமி ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.