வனத்துறையினர் அழைத்து சென்ற கணவரை காணவில்லைஎஸ்.பி.,யிடம் மனைவி புகார்
வனத்துறையினர் அழைத்து சென்ற கணவரை காணவில்லைஎஸ்.பி.,யிடம் மனைவி புகார்தர்மபுரி:தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த, ஏமனுார் வனப்பகுதியில் மார்ச், 1 அன்று ஆண் யானையை கொன்று எரித்து, தந்தங்கள் வெட்டி எடுக்கப்பட்டது.இது தொடர்பாக நேற்று முன்தினம் இரவு கொங்கரப்பட்டியை சேர்ந்த விஜயகுமார், 23, கோவிந்தராஜ், 54, செங்கம்பாடியை சேர்ந்த தினேஷ், 26 ஆகிய மூவரை கைது செய்து, அவர்களிடமிருந்து யானையின் தந்தம், துப்பாக்கி உட்பட ஆயுதங்கள் பறிமுதல் செய்ததாகவும், 3 பேர், தலைமறைவாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.இந்நிலையில், நேற்று முன்தினம், கொங்கரப்பட்டியை சேர்ந்த செந்தில்,30, என்பவரை கைது செய்து, அவருக்கு கையில் விலங்கு அணிவித்து, ஏமனுார் வனப்பகுதியில் யானையை கொன்ற இடத்திற்கு விசாரணைக்காக, வனத்துறையினர் அழைத்து சென்றனர். அப்போது, அவர் தப்பியதாக கூறப்படுகிறது. செந்தில் குறித்து, எந்த தகவலும் தெரியவில்லையென, அவரது மனைவி சித்ரா, தர்மபுரி மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்தார். அதில், அவர் கூறியுள்ளதாவது: பென்னாகரம் அடுத்த, கொங்கரப்பட்டியில் வசிக்கிறோம். என் கணவர் செந்தில், 30, கட்டட மேஸ்திரி. எங்களுக்கு, 2 குழந்தைகள். கடந்த, 17ல் என் கணவர், செங்கம்பாடி புதுாரில் பணியில் இருந்தார். அப்போது, பென்னாகரம் வனத்துறையினர் நிலம் சம்பந்தமாக விசாரிக்க, மொபைல் போனில் அழைத்தனர். விசாரணை என்ற பெயரில், என் கணவரை வன பகுதிக்கு அழைத்து சென்று, கொன்று விட்டார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது, என அதில் தெரிவித்திருந்தார்.இது குறித்து, தர்மபுரி மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் கூறுகையில், ''ஏமனுாரில் யானையை கொன்று, தந்தம் கடத்திய வழக்கில் கைதான செந்திலை, வனப்பகுதிக்கு அழைத்து சென்று, அவர் பதுக்கிய ஆயுதங்களை மீட்டு கொண்டிருந்தோம். அப்போது, கைவிலங்குடன் இருந்த செந்தில், வனத்துறை அதிகாரிகளை தாக்கி விட்டு, தப்பினார். செந்தில் உட்பட இந்த வழக்கில் தொடர்புடைய தந்தத்தை விலை பேசிய இடைதரகர்கள் என, 3 பேரை தேடி வருகிறோம். தப்பிய செந்தில் குறித்து, ஏரியூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.