உரூஸ் திருவிழாவில் சந்தனக்குட ஊர்வலம்
உரூஸ் திருவிழாவில் சந்தனக்குட ஊர்வலம்கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி, டோல் கேட் அருகே சங்கல்தோப்பு தர்காவில், ஆண்டுதோறும் ரம்ஜான் பண்டிகை முடிந்த பின், 2 நாட்கள் உரூஸ் திருவிழா நடப்பது வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம் துவங்கிய இவ்விழாவில், பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.சங்கல்தோப்பு தர்கா கமிட்டி தலைவர் நவாப் தலைமையில் நடந்த, 2வது நாள் விழாவில், கிருஷ்ணகிரி பழையபேட்டை கோட்டை பகுதியில் இருந்து அலங்கரித்த வாகனத்தில், சந்தனக்குட ஊர்வலம் நடந்தது. நகரின் முக்கிய சாலைகளில் ஊர்வலமாக சென்று, அதிகாலை கிருஷ்ணகிரி சங்கல்தோப்பு தர்காவை அடைந்தது. விழாவில், கோட்டை பகுதி ஹிந்து மதத்தை சேர்ந்தவர்கள் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி, சந்தனம், புஷ்பம், பழங்கள் அடங்கிய சீர்வரிசைகளை விழா கமிட்டி தலைவர் நவாப் மற்றும் இஸ்லாமிய சகோதரர்களிடம் வழங்கினர். அப்பொருட்கள் அனைத்தையும் சந்தனக்குடம் ஊர்வலத்துடன் தர்காவுக்கு கொண்டு சென்றனர்.இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை, தர்கா கமிட்டி செயலாளார் கவுஸ்ஷெரிப், பொருளாளர் அஸ்கர்அலி, நிர்வாகிகள் அமீர்சுஹேல், அத்தாவுல்லா ஷெரீப், முன்னாள் கவுன்சிலர் லியாகத் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர். இதில், தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திராவை சேர்ந்த ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.