கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் வட்டம் தொகரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மாதவன், 56; இவர், எல்லை பாதுகாப்பு படையில், 37 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். தற்போது, பஞ்சாப் மாநிலத்தில், எல்லை பாதுகாப்பு படை பிரிவு, 55-ல் உதவி ஆய்வாளராக பணியாற்றினார். இவர் மனைவி சாரதா, மகள் கோகிலா, 23, மகன் ஜெகன்நாதன், 21.பணியில் இருந்த மாதவன் கடந்த, 31- இரவு, 10:40 மணிக்கு மாரடைப்பால் இறந்தார். நேற்று முன்தினம் அவரது உடல், பி.எஸ்.எப்., வீரர்கள் விமானம் மூலம் பெங்களூருக்கு கொண்டு வந்தனர். பின் அங்கிருந்து, ஆம்புலன்ஸ் மூலம் தொகரப்பள்ளி கிராமத்திற்கு இரவு, 11:00 மணிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பொதுமக்களின் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது. கிருஷ்ணகிரி, மாவட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்கத்தினர், துணை ராணுவ படை நலச்சங்கம், கிருஷ்ணகிரி கமாண்டோ குழு சி.ஆர்.பி.எப்., நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து எஸ்.டி.சி., பி.எஸ்.எப்., அலுவலர்களான துணை கமான்டன்ட் சுமித்குமார், ஆய்வாளர் தருண்யாதவ் தலைமையிலான, எல்லை பாதுகாப்பு படை வீரர்கள், மாதவனின் உடலுக்கு தேசிய கொடியை போர்த்தி, மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின், மாதவனின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, அரசு மரியாதையுடன், 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது.