அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டடம் கட்டி தரக்கோரி பெற்றோர் ஆர்ப்பாட்டம்
ஊத்தங்கரை, ஆக. 25-ஊத்தங்கரை அடுத்த, புதுார் புங்கனை கிராமத்தில், 25 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் அங்கன்வாடி மைய கூரை பெயர்ந்து அபாய நிலையில் உள்ளது. புதிய கட்டடம் கேட்டு, பலமுறை மனு கொடுத்தும், நடவடிக்கை இல்லை. புதிய கட்டடம் வரும் வரை, மாணவர்களை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்ப மாட்டோம் எனக்கூறி, பெற்றோர் நேற்று அங்கன்வாடி மையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கடந்த, 2022 ஆக.,ல் ஊத்தங்கரை சுற்றுவட்டாரத்தில் வீசிய சூறைக்காற்றால் புங்கனை அங்கன்வாடி மைய கூரை துாக்கி வீசப்பட்டது. இதனால், உள்ளூர் நிர்வாகிகள், மாணவர்களின் நலன் கருதி, அருகில் கோவில் வளாகத்திலுள்ள வனக்குழு அலுவலக கட்டடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட அனுமதித்தனர். தற்போது, கோவில் திருவிழா நடந்த நிலையில், அந்த அங்கன்வாடி மைய குழந்தைகளை, மீண்டும் அந்த பழுதடைந்த அங்கன்வாடி மைய கட்டடத்திற்கு அனுப்பினர். தற்போது மழை பெய்து வரும் நிலையில் அந்த கட்டடத்திற்குள் குழந்தைகளை அமர வைக்க முடியவில்லை என, பலமுறை ஊத்தங்கரை பி.டி.ஓ.,க்கள் மற்றும் மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோருக்கும் பலமுறை பெற்றோர் சார்பில் புகார் மனு அளித்தும் பயனில்லை.அங்கன்வாடி மையத்திற்கு வழங்கப்படும் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை மற்றும் சத்து மாவு உள்ளிட்ட அனைத்து பொருட்களும் மழையில் நனைந்து வீணாகிறது, இதனால், குழந்தைகளுக்கு உணவு வழங்குவதில், சிரமம் ஏற்படுவதாக பெற்றோர் வேதனை தெரிவிக்கின்றனர்.