உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / செக்போஸ்ட்டில் "ரெய்டு ரூ.1.20 லட்சம் பறிமுதல்

செக்போஸ்ட்டில் "ரெய்டு ரூ.1.20 லட்சம் பறிமுதல்

ஓசூர்: ஓசூர் அருகே தமிழக, கர்நாடகா எல்லையில் உள்ள சோதனை சாவடியில், லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில், கணக்கில் வராத ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மோட்டார் வாகன ஆய்வாளர் உள்பட மூவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழக, கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநில எல்லையில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து அனுமதியின்றி பொருட்கள் கடத்துவதை தடுக்க, தமிழக எல்லையில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஓசூர் அருகே ஜுஜுவாடி, சிப்காட் போன்ற இடங்களில் சோதனை சாவடிகள் உள்ளன. ஜுஜுவாடியில் கர்நாடகா வழியாக வட மாநிலங்களில் இருந்து, தமிழகத்திற்கு வரும் வாகனங்களையும், சிப்காட்டில் தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் வாகனங்களையும், சோதனை சாவடி அலுவலர்கள் சோதனை செய்கின்றனர். கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை, டி.எஸ்.பி., ராமச்சந்திரன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீஸார், தனித்துணை ஆட்சியர் ராஜகோபால் ஆகியோர் நேற்று அதிகாலை ஜுஜுவாடியில் உள்ள சோதனைச்சாவடியில் திடீர் சோதனை நடத்தினர். லஞ்ச ஒழிப்பு போலீஸாரை கண்டதும், சோதனை சாவடியில் முகாமிட்டிருந்த புரோக்கர்கள் தப்பியோடி விட்டனர். சோதனைச்சாவடி அலுவலர்கள், அலுவலக மேஜைக்கு அடியிலும், குப்பை தொட்டியிலும் மறைத்து வைத்திருந்த கணக்கில் வராத, ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை, போலீஸார் பறிமுதல் செய்தனர். பணியில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம், கிளர்க் வேலாயுதம், உதவி அலுவலர் பங்காரு ஆகியோரிடம் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தினர். அதன் பின், போலீஸார் மூவரையும் லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிட்டனர். இது குறித்து லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., ராமச்சந்திரன் கூறியதாவது: கணக்கில் வராத பணத்தை மறைத்து வைத்த மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர் செல்வம் உள்ளிட்ட மூவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தவும், அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் அனைத்து சோதனைச்சாவடிகளிலும் சோதனை நடத்த முடியாது என்பதால், ஒரு சோதனைச்சாவடியில் மட்டும் நடத்தப்பட்டது. இனி அடிக்கடி சோதனை சாவடிகளில் சோதனை நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை