கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி அருகே, தி.மு.க.,வினர், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை படத்தை ஆட்டின் தலையில் மாட்டி, தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டின் தலையை தி.மு.க.,வினர் துண்டித்துள்ளனர். லோக்சபா தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில், தி.மு.க., கூட்டணி போட்டியிட்ட, 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே பையூர் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் ஆடு ஒன்றின் கழுத்தில், பா.ஜ., தலைவர் அண்ணாமலை படத்தை அணிவித்து, ஆட்டை இழுத்து வந்து, அந்த ஆட்டை நடுரோட்டில் தலையை வெட்டி 'அண்ணாமலை ஆடு பலி ஆடு' என, தி.மு.க.,வினர் கோஷமிட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ பதிவு, சமூக வலைதளங்களில் பரவி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, பா.ஜ., தலைவர் சிவப்பிரகாஷ் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது:பா.ஜ., தலைவர் அண்ணாமலை படத்தை ஆட்டின் தலையில் மாட்டி வெட்டி கொன்றுள்ளனர். ஆட்டின் ரத்தத்தை அண்ணாமலையின் படத்தின் மிது தெளித்தும், ஆட்டை நடுரோட்டில் தரதரவென்று இழுத்தும், அவருக்கு எதிராக கோஷமிட்டுள்ளனர். அரசியல் நாகரிமற்ற, அநாகரிகமான இந்த செயலை கண்டிக்கிறோம்.அண்ணாமலை உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவோம் என மறைமுகமாக எச்சரிக்கை விடுத்து, சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் தி.மு.க.,வினர் நடந்து கொண்டுள்ளனர். இந்த செயலை செய்த அவர்களை கைது செய்ய வலியுறுத்தி, கிருஷ்ணகிரி எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்துள்ளோம்.இவ்வாசறு கூறினார்.இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக, பையூரில் சிக்கன் கடை நடத்தி வரும் தி.மு.க.,வை சேர்ந்த மதி, டீக்கடை நடத்தி வரும் ருத்ரமணி, தி.க.,வை சேர்ந்த செல்வேந்திரன், இளங்கோவன், சிற்றரசு, பாரத் மற்றும் 10 பேர் மீது, பா.ஜ.,வினர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
தரம் தாழ்ந்த அரசியல்!
நடு ரோட்டில் ஒரு ஆட்டை கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ள சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்ணாமலை மீது, தமிழக அரசியல் கட்சிகள் கொண்டுள்ள கொலை வெறியை இது வெளிப்படுத்துகிறது. ஊழலை, லஞ்சத்தை, முறைகேடுகளை தட்டிக் கேட்டால், கொலை செய்யவும் தயங்க மாடடோம் என்பதை சொல்லாமல் உணர்த்தும் விதமாக இப்படி செய்திருக்கின்றனர். ஓட்டு எண்ணிக்கையின் போது, தி.மு.க., அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்ட தி.மு.க.,வினர் ஒரு ஆட்டை பிடித்து கொண்டிருந்த காட்சி, தி.மு.க.,வினர் எந்த அளவிற்கு தரம் தாழ்ந்து அரசியல் செய்கின்றனர் என்பதை தெளிவாக்குகிறது. சிறுவர்களை தூண்டி விட்டு, அவர்களின் மனங்களில் வன்முறையை வன்மத்தை புகுத்தியது கொடும் குற்றம்.பா.ஜ., தலைவர் அண்ணாமலை மீது உள்ள பயம், தமிழகத்தில் தி.மு.க.,வினர் அரங்கேற்ற துடிக்கும் வெறியாட்டத்தால் வெளிப்பட்டிருக்கிறது. அண்ணாமலையின் பாதுகாப்புக்கு, தமிழக காவல்துறை முழு பொறுப்பேற்க வேண்டும்.நாராயணன் திருப்பதி,துணைத் தலைவர், தமிழக பா.ஜ.,