| ADDED : மே 12, 2024 11:59 AM
ஓசூர்: தளியில், 'செல்ப்' எடுக்காமல் நின்ற அரசு பஸ்சை, கல்லுாரி மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து, தள்ளி விட்டு, 'ஸ்டார்ட்' செய்ய வைத்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரிலிருந்து தளிக்கு தினமும் அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. தளி அரசு கலைக்கல்லுாரி மற்றும் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவியர் மற்றும் ஓசூருக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் என, பல தரப்பு மக்களும் அரசு டவுன் பஸ்களில் பயணிக்கின்றனர். ஓசூரில் இருந்து தளி பஸ் ஸ்டாண்டிற்கு, நேற்று மதியம், 1:00 மணிக்கு அரசு டவுன் பஸ் ஒன்று வந்தது. தளி பஸ் ஸ்டாண்டிற்குள் வந்தவுடன் பஸ் திடீரென நின்றது.பஸ், 'செல்ப்' எடுக்காததால், கலைக்கல்லுாரி மாணவர்கள் மற்றும் கண்டக்டர் ஆகியோர், பஸ்சை பின்நோக்கி தள்ளினர். அதன் பின் தான் பஸ் 'ஸ்டார்ட்' ஆனது. அதன் பின் ஓசூர் நோக்கி பஸ் புறப்பட்டு சென்றது. அரசு டவுன் பஸ்கள் பராமரிப்பின்றி மோசமான நிலையில் உள்ளன. இந்த மோசமான பஸ்களில் தான், பெண்களும் இலவசமாக பயணிக்க வேண்டியுள்ளது. எனவே, பஸ்களை சரியான முறையில் பராமரித்து இயக்க, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.