| ADDED : ஆக 22, 2024 02:22 AM
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி அடுத்த கொண்டேபள்ளியைச் சேர்ந்தவர் தீர்த்தகிரி, 80. இவருக்கு, நான்கு மகன்கள், இரு மகள்கள். கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று தீர்த்தகிரியின் மகன்கள் மற்றும் பேரன்கள் உட்பட ஏழு பேர், போலி என்.சி.சி., பயிற்சியாளர் சிவராமன் மீது புகார் அளித்தனர்.பின் அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:எங்கள் தந்தைக்கு 8.75 ஏக்கர் நிலம் உள்ளது. இதில், 29 சென்ட் நிலத்தை, 2006ல் பெருமாள் என்பவர் வாங்கினார். அதன் அருகே, எங்கள் நிலங்களுக்கு செல்லும் பாதையை மறைத்து வீடு கட்டினார். அதனால் பிரச்னை ஏற்பட்டது. 'நாங்கள் விற்ற நிலத்தை திருப்பிக் கொடுத்து விடுங்கள்; அதற்கான விலையை கொடுத்து விடுகிறோம்' என கூறினோம். பெருமாள் ஏற்கவில்லை.அப்போது கிருஷ்ணகிரி மாவட்ட நா.த.க., இளைஞர் பாசறை செயலராக சிவராமன் இருந்தார். அவரிடம் பிரச்னையை சொன்னோம். 'நானே ஒரு வக்கீல். பிரச்னையை மூன்று மாதத்தில் முடித்து தருகிறேன். நில மீட்பு தொகையாக 34 லட்சம்; எனக்கு கட்டணமாக 2.20 லட்சம் ரூபாய் கொடுத்து விடுங்கள்' என்று கேட்டார். மூன்று தவணைகளாக 36.20 லட்சம் ரூபாய் கொடுத்தோம். 'பெருமாள் தரப்பினர் உங்கள் மீது புகார் அளித்துள்ளனர். அதில் ஜாமின் பெற, வக்கீல் அமரேசன் கணக்கிற்கு 42,000 ரூபாய் அனுப்புங்கள்' என்றார் சிவராமன். அதையும் அனுப்பினோம். அதன் பிறகு எங்களுக்கு சாதகமாக கோர்ட் வழங்கிய ஆணை, நாங்கள் கொடுத்த பணத்திற்கான வங்கி சலான் ஆகியவற்றை கொடுத்தார். மகிழ்ச்சியாக பெற்றுக் கொண்டோம். பிறகு தான் அவர் கொடுத்த ஆவணங்கள் எல்லாமே போலி என தெரிந்தது.இப்போது சிவராமன் பாலியல் பலாத்கார வழக்கில் கைதானதை அறிந்தோம். எனவே, பண மோசடி குறித்து அவர் மீது ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.