வீட்டில் தனியாக இருந்த இரு முதியவர்கள் படுகொலை
ஓசூர்:வீட்டில் தனியாக இருந்த, 2 முதியவர்களை மர்ம கும்பல், வெட்டி கொலை செய்து விட்டு தப்பியது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே கோட்டூரை சேர்ந்தவர் லுார்துசாமி, 70. இவர் மனைவி தெரசாள், 65. கடந்த, 20 ஆண்டுக்கு மேலாக, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே ஒன்னல்வாடியில் வசித்து வந்தனர். இவர்களுக்கு, சகாயராணி, 48, விக்டோரியா, 44, என இரு மகள்கள். இளைய மகள் திருமணமாகி சென்னையில் வசிக்கிறார். மூத்த மகள் திருமணம் செய்யாமல் பெற்றோருடன் உள்ளார்.கடந்த ஒரு வாரத்திற்கு முன், சிறுநீரக கல் அறுவை சிகிச்சைக்காக சென்னையிலுள்ள மருத்துவமனைக்கு மகள் சகாயராணியை, தெரசாள் அழைத்து சென்றார். கணவனுக்கு உணவு சமைத்து கொடுக்க, மன்னார்குடி அருகே வசிக்கும் தன் தங்கை எலிசபெத், 60, என்பவரை கடந்த, 6ம் தேதி ஓசூருக்கு வரவழைத்திருந்தார்.நேற்று மாலை, 4:00 மணிக்கு, லுார்துசாமி மற்றும் எலிசபெத் வீட்டிலிருந்தனர். அப்போது வந்த மர்ம கும்பல், ஹாலில் இருந்த இருவரையும் வெட்டிக்கொன்றது. பின், ஷோபாக்களுக்கு தீ வைத்து விட்டு தப்பியது. வீட்டில் புகை வருவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் படி, ஓசூர் டவுன் போலீசார் விசாரித்தனர்.எலிசபெத் அணிந்திருந்த நகை மற்றும் லுார்துசாமி பாக்கெட்டில் இருந்த, 1,500 ரூபாய் அப்படியே இருந்தது. வீட்டிலிருந்த பீரோ உடைக்கப்படவில்லை. அதனால், பணம், நகைக்காக கொலை நடந்திருக்க வாய்ப்பில்லை என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.கொலை கும்பலை பிடிக்க, தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ஓசூர் டவுன் போலீசார், அப்பகுதி, 'சிசிடிவி' கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.