ஓசூர்: சூளகிரி அருகே, தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தரைமட்ட பால பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 23 பேர் படுகாயமடைந்தனர்.சேலம் மாவட்டம், புத்திரகவுண்டன்பாளையத்தை சேர்ந்த, 5 குழந்தைகள் உட்பட, 19 பேர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் நடந்த குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, வேனில் ஊர் திரும்பினர்.சூளகிரி அடுத்த சின்னாறு பகுதி, ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், காலை, 11:00 மணிக்கு வேன் வந்தது. அப்போது, தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளை கோடு போட, டாடா ஏஸ் வாகனத்தில் கொண்டு வந்த பெயின்டை, வடமாநில தொழிலாளர்கள் இறக்கி கொண்டிருந்தனர். அந்த வாகனம் மீது, வேன் மோதியதில், பெயின்ட் சிதறி வேன் முகப்பு கண்ணாடியில் கொட்டியது. இதனால், முன்னால் செல்லும் வாகனத்தை டிரைவரால் பார்க்க முடியாமல், வேன் கட்டுப்பாட்டை இழந்து, வட மாநில தொழிலாளர்கள், 4 பேர் மீது மோதிய வேன், சாலை தரைமட்ட பால பள்ளத்தில் கவிழ்ந்தது.இந்த விபத்தில், வேனை ஓட்டி வந்த சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த டிரைவர் அஜய், 23, வேனில் வந்த விஜயலட்சுமி, 67, குழந்தைகள், 5 பேர் மற்றும் வடமாநில தொழிலாளர்கள், 4 பேர் என மொத்தம், 12 பெண்கள் உட்பட, 23 பேர் காயமடைந்தனர்.அவர்களை மீட்ட சூளகிரி போலீசார், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.