உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி /  கள்ளக்காதலுக்கு இடையூறு: கணவனை கொன்ற மனைவி உட்பட 4 பேர் கைது

 கள்ளக்காதலுக்கு இடையூறு: கணவனை கொன்ற மனைவி உட்பட 4 பேர் கைது

ஓசூர்: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொலை செய்த மனைவி உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், பார்வதி நகரை சேர்ந்தவர் சரவணன், 25; கூலி தொழிலாளி. இவரது மனைவி முத்துலட்சுமி, 20. இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு முன் பார்வதி நகரை சேர்ந்த சூர்யா, 23, என்பவரை, முத்துலட்சுமி காதலித்தார். பின், அவரை பிரிந்து, சரவணனை காதலித்து திருமணம் செய்தார். ஆனால், சூர்யாவை மறக்க முடியாமல், திருமணத்திற்கு பின்பும் அவருடன் தொடர்பில் இருந்தார். சரவணன் இல்லாத நேரத்தில், சூர்யாவை, முத்துலட்சுமி தனிமையில் சந்தித்து வந்தார். இதையறிந்த சரவணன், இருவரையும் கண்டித்துள்ளார். ஓராண்டிற்கு முன், சூர்யாவுடன், முத்துலட்சுமி ஓட்டம் பிடித்தார். ஒரு வாரத்திற்கு பின், முத்துலட்சுமியை மீட்டு, சரவணனுடன் உறவினர்கள் சேர்த்து வைத்தனர். அதன் பின்பும், இருவரும் கள்ளக்காதலை கைவிடவில்லை. அதனால் தினமும் தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் மதியம், மதுபோதையில் இருந்த சரவணன், முத்துலட்சுமியை அடித்துள்ளார். இதனால் சூர்யாவிற்கு போன் செய்த முத்துலட்சுமி, தன்னை அழைத்துச் சென்று விடுமாறும், இல்லாவிட்டால் கணவன் சரவணனை தீர்த்துக் கட்டுமாறும் கூறியுள்ளார். நேற்று முன்தினம் இரவு, மதுபோதையில் சரவணன் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு, 12:30 மணிக்கு தன் நண்பர் சக்தி, 20, என்பவருடன் சூர்யா அங்கு வந்தார். முத்துலட்சுமி, வீட்டின் கதவை திறந்து விட, உள்ளே சென்ற சூர்யா, சக்தியுடன் சேர்ந்து, சரவணனை அரிவாளால் வெட்டியும், கத்தியால் குத்தியும் கொலை செய்து விட்டு தப்பினர். சரவணனின் தாய் சத்தம் கேட்டு எழுந்து வராமல் தடுக்க, அவரது அறை கதவை வெளிப்புறமாக முத்துலட்சுமி பூட்டினார். நள்ளிரவு, 1:30 மணிக்கு மேல், சரவணன் இறந்ததை அறிந்த அவரது தாய் மங்கம்மாள், 48, ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் வழக்கு பதிந்த போலீசார், முத்துலட்சுமி, சூர்யா, பார்வதி நகரை சேர்ந்த சந்தோஷ், 22, சக்தி, ௨௨, ஆகியோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை