கொலை வழக்கில் ஜாமினில் வந்தவரை கொல்ல முயன்ற 5 பேர் கைது
கிருஷ்ணகிரி, தென்காசியில் நடந்த, அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் ஜாமினில் வந்தவரை நோட்டமிட்டு, கிருஷ்ணகிரியில் கொல்ல முயன்ற, ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு, நேற்று முன்தினம் மாலை தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசியவர், புதிய பஸ் ஸ்டாண்ட் ஏரிக்கரை அருகில், ஒருவரை சிலர் அரிவாளால் துரத்தி கொண்டிருக்கின்றனர் என கூறி போனை வைத்து விட்டார். போலீசார் சென்று பார்த்த போது அரிவாள், பெட்ரோல் கேனுடன் ஒரு கும்பல் ஒருவரை துரத்தியது. அங்கு சென்ற போலீசார் அரிவாளுடன் இருந்த, 5 நபர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் சிக்கியவரையும் மீட்டனர்.தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அடுத்த மேலநீலித நல்லுாரை சேர்ந்தவர் வெளியப்பன், அ.தி.மு.க., பிரமுகர். கடந்த, 2024 செப்.,8ல் நடைபயிற்சி மேற்கொண்ட போது அவரை சிலர் வெட்டி கொலை செய்தனர். இது தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த அண்ணன், தம்பியான பாலமுருகன், முத்துராஜ் உள்பட, 4 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் நிபந்தனை ஜாமினில் வெளியே வந்தனர்.அவர்களில் முத்துராஜ் சென்னை போலீஸ் ஸ்டேஷனில் தினமும் கையெழுத்திட்டு, அங்குள்ள ஆலந்துார் டாஸ்மாக் கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். கொலை வழக்கில் ஜாமினில் வந்த நிலையில், ஊருக்கு சென்றால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என எண்ணி முத்துராஜ் சென்னையிலேயே தங்கி இருந்தார்.இந்நிலையில், கொலை செய்யப்பட்ட வெளியப்பனின் அண்ணன் பொன்னுபாண்டியின் மகன் கார்த்திக், 26, தன் கூட்டாளியான தென்காசி மாவட்டம் கற்படம் கிராமத்தை சேர்ந்த கார்த்திக்ராஜ், 20, என்பவரிடம் எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை. முத்துராஜை தீர்த்து கட்ட வேண்டுமென கூறியுள்ளார்.இதையடுத்து கார்த்திக், கார்த்திக்ராஜ், கூட்டாளிகளான தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு கணேசன், 22, கோவில்பட்டி சூர்யா, 20, சீனிவாசன் நகர் கார்த்திகேயன், 22, ஆகியோர் கொண்ட கூலிப்படையை அழைத்து வந்தனர். சென்னையில் வேலை செய்வதை அறிந்த அவர்கள், முத்துராஜை தீர்த்து கட்டுவது என முடிவு செய்தனர். அதற்காக, 10 லட்சம் ரூபாய் பேரம் பேசப்பட்டுள்ளது.கடந்த இரு மாதங்களாக நோட்டமிட்ட அவர்கள், முத்துராஜ் கிருஷ்ணகிரிக்கு வந்த தகவலை தெரிந்து கொண்டு அவரை தீர்த்து கட்ட வந்துள்ளனர். அப்போது போலீசாரிடம் சிக்கி உள்ளனர். அவர்கள், 5 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து, சுசுகி ஆல்டோ கார், பெட்ரோல் கேன் மற்றும் அரிவாள்களை பறிமுதல் செய்தனர்.