ஓசூர்: கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்து, ஓசூர் வழியாக கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து நடக்கிறது. மக்கள் சாலையை கடக்கும் முக்கிய இடங்களில், அதிவேகமாக வரும் வாகனங்களின் வேகங்களை குறைக்கும் வகையில், ஜூஜூவாடி, இ.எஸ்.ஐ., மருத்துவமனை, மூக்கண்டப்பள்ளி, தர்கா, சீத்தாராம்மேடு, பத்தலப்பள்ளி, பேரண்டப்பள்ளி போன்ற இடங்களில், சாலையை லேசாக தோண்டி, அதில் வாகனங்கள் செல்லும்போது, அதிர்வு ஏற்படுவது போன்ற வேகத்தடை போன்ற ஒரு கட்டமைப்பை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஏற்படுத்தி உள்ளது. அப்பகுதியில் ஒளிரும் விளக்கு மற்றும் எச்சரிக்கை பலகை போன்ற எதுவும் இல்லாததால், அதிவேகமாக வரும் வாகனங்கள், திடீரென வேகத்தை குறைக்கும்போது, பின்னால் வரும் வாகனம் மோதி விபத்து ஏற்படுகிறது.நேற்று மதியம், பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி, பிளாஸ்டிக் சேர்களை ஏற்றிய லாரி சென்றது. பேரண்டப்பள்ளியில் வேகத்தடை போன்ற அமைப்பு இருந்ததால், டிரைவர் லாரியின் வேகத்தை குறைத்தார். அப்போது அதன் மீது பின்னால் வந்த மற்றொரு லாரி மோதியது. இதில் லாரி சாலையில் கவிழ்ந்து, பிளாஸ்டிக் சேர்கள் சாலைகளில் சிதறி, வாகன போக்குவரத்து பாதித்தது. போலீசார் விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீரமைத்தனர்.