| ADDED : ஜன 06, 2024 07:14 AM
ஓசூர் : தேன்கனிக்கோட்டை அருகே, அடகு கடையின் ஷட்டரை துளையிட்டு உள்ளே புகுந்த மர்ம கும்பல், பொதுமக்கள் உஷாரானதால் தப்பினர். இதனால், 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் தப்பின. கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா, இருதுக்கோட்டையில் வசிப்பவர் கோவர்த்தனராம், 26. இவர் தனது வீட்டின் தரைதளத்தில், மகாலட்சுமி என்ற பெயரில் அடகு கடை நடத்தி வருகிறார்; முதல் தளத்தில் குடும்பத்துடன் வசிக்கிறார். கடந்த, 3 இரவு, 7:30 மணிக்கு கடையை மூடி விட்டு வீட்டிற்கு சென்றார். நள்ளிரவு நேரத்தில் கடையின் இரும்பு ஷட்டரில் துளை போட்டு உள்ளே புகுந்த மர்ம கும்பல், அங்கு லாக்கரை உடைத்து அதற்குள் இருந்த தங்க நகைகளை திருட முயற்சி செய்தது.அக்கம்பக்கத்தில் வசிக்கும் மக்கள், கடைக்குள் இருந்து சத்தம் வருவதை கேட்டு, கோவர்த்தனராமிற்கு தகவல் தெரிவித்தனர். மேலும், பொதுமக்களும் மர்ம நபர்களை பிடிக்க தயாராகினர். கோவர்த்தனராம் மாடியில் இருந்து இறங்கி வருவதை அறிந்த கும்பல், அங்கிருந்து தப்பியது. இதனால், அடகு கடையில் உள்ள லாக்கரில் இருந்த, 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 500 கிராம் தங்க நகைகள் தப்பின.இது தொடர்பாக கடையில் இருந்த, 'சிசிடிவி' கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.