டாஸ்மாக்கில் திருட முயற்சி
ராயக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை யில் உள்ள கிருஷ்ணகிரி சாலையில், வஞ்சிரபள்ளம் என்ற இடத்தில், மாந்தோப்பிற்குள் டாஸ்மாக் கடை இயங்குகிறது. இங்கு, மின் வசதி இல்லாததால், இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படும். கடை விற்பனையாளராக பன்னீர்செல்வம், 40, என்பவர் உள்ளார். நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு கடையை மூடி விட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று அதிகாலை, 2:30 மணிக்கு, மர்ம நபர்கள் சிலர், டாஸ்மாக் கடை பூட்டை உடைத்துள்ளனர். அவ்வழியாக ரோந்து சென்ற, ராயக்கோட்டை போலீசார், சத்தம் கேட்டு அங்கு சென்றபோது, மர்ம நபர்கள் தப்பியோடினர். அதனால், கடையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபானங்கள் தப்பின. ராயக்கோட்டை போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.