பாகலுார் சாலை பணி துவக்கம் மாற்றுப்பாதையில் போக்குவரத்து
ஓசூர் :ஓசூரிலுள்ள பாகலுார் சாலை, 2 கி.மீ., துாரத்திற்கு மோசமாக இருப்பதால், அச்சாலையை புதிதாக அமைக்கும் பணி நாளை துவங்க உள்ளது. இச்சாலையில், 4 இடங்களில் சாலையின் குறுக்கே கல்வெட்டு அமைக்கப்பட உள்ளதால், கனரக வாகனங்களை இச்சாலையில் அனுமதிக்கப்படுவது சிரமம் என, நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது. அதனால் மாற்றுபாதையில் வாகனங்கள் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.எனவே, ஓசூரிலிருந்து பாகலுார் நோக்கி செல்லும் வாகனங்கள், தளி ஜங்ஷன் மேம்பாலத்திற்கு அடியிலுள்ள சர்வீஸ் சாலையில் இருந்து திரும்பி, விவேக் கார்டன், பாகலுார் ஹவுசிங் போர்டு வழியாகவும், பாகலுாரில் இருந்து வரும் வாகனங்கள், கே.சி.சி., நகர் வழியாக சின்ன எலசகிரி செல்லும் சாலையை பயன்படுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இந்த இரு மாநகராட்சி சாலைகளையும் நேற்று ஆய்வு செய்த மாநகர மேயர் சத்யா, பொக்லைன் வாகனம் மூலம் சாலையை அகலப்படுத்தி, மண் கலவை கொட்டி வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்ய, மாநகராட்சி அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.