| ADDED : பிப் 23, 2024 04:22 AM
கிருஷ்ணகிரி: மாற்றுத்திறனாளிகளுக்கான, 4 சதவீத இட ஒதுக்கீட்டில் பார்வை குறைபாடு உடையவர்களுக்கு, ஒரு சதவீத உள் ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட, 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் அருகே ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை, சர்வீஸ் சாலையில் பார்வையற்ற கல்லுாரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்க மாவட்ட தலைவர் செல்வம் தலைமையில், 15-க்கும் மேற்பட்ட மாற்றத்திறனாளிகள், கோரிக்கைகளை வலியுறுத்தி, திடீர் மறியலில் ஈடுபட்டனர். அங்கு வந்த கிருஷ்ணகிரி தாலுகா இன்ஸ்பெக்டர் குலசேகரன் மற்றும் போலீசார் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அதை ஏற்க மறுத்த அவர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரி வரவேண்டும் எனக்கூறினர். இதையடுத்து மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன் அவர்களிடம், உங்கள் பிரச்னைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதி அளித்ததையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.