| ADDED : மார் 12, 2024 04:35 AM
கிருஷ்ணகிரி: தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்களின் சார்பில், 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. கவுரவ பொதுச்செயலாளர் குப்புசாமி, மாவட்ட தலைவர்கள் அசோகன், தனபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர்கள் நரசிம்மன், செந்தில் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில், காலதாமதமின்றி நகர மற்றும் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு நியாயமான புதிய ஊதிய உயர்வு அறிவிக்க வேண்டும். மாவட்ட, மாநில தேர்வாணைக்குழு மூலம் தேர்வு செய்யப்படும் பணியாளர்கள், சொந்த ஊரிலிருந்து வெகு தொலைவிற்கும், வேறு மாவட்டத்திலும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். குறைவான சம்பளத்தில் சொந்த ஊர் மற்றும் குடும்பத்தை பிரிந்து வேலை பார்ப்பதிலுள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு, இவர்களை சொந்த ஊருக்கு இடமாறுதல் செய்ய வேண்டும். விற்பனையாளர்களுக்கு அங்காடி பணிகளை தவிர, வீடு வீடாக சென்று டோக்கன் கொடுத்தல், வருவாய்த்துறையினர் செய்ய வேண்டிய இலவச வேட்டி, சேலை வழங்கும் பணியை அங்காடிகளில் திணிப்பது, வீடு வீடாகச் சென்று மாலை, 6:00 மணிக்கு மேல் கைரேகை பதியச்சொல்லி கட்டாயப்படுத்தக் கூடாது என்பது உள்ளிட்ட, 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷங்களை எழுப்பினர். இதில், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பங்கேற்றனர்.