தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று காலை கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தேன்மொழி தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர்கள் சரவணபவன், திருநாவுக்கரசு, மண்டல தலைவர் ஸ்ரீனிவாசலு, மாவட்ட இணை செயலாளர் ரங்கநாதன், ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு குணசேகரன், மின் துறை ஓய்வூதியர் நலச்சங்கம் முனிரத்தினம் ஆகியோர் பேசினர். மாவட்ட தலைவர் துரை நிறைவாக பேசினார். ஆர்ப்பாட்டத்தில், சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம், 7,850 ரூபாய் வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி மருத்துவ காப்பீடு திட்டம், குடும்ப ஓய்வூதியம், குடும்ப நல நிதி, 50,000 ரூபாய், ஈமச்சடங்கு தொகை, 25,000 ரூபாய், பண்டிகை முன்பணம், பொங்கல் பரிசுத்தொகை உள்ளிட்ட வாழ்வாதார கோரிக்கைகள் மற்றும் தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். ஓய்வூதியம், மாத இறுதி நாளன்று வழங்க உறுதி செய்ய வேண்டும். வாழ்க்கை சான்றிதழ் ஆண்டிற்கு ஒருமுறை அமல்படுத்த வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்டன கோஷங்களை எழுப்பினர்.