மேலும் செய்திகள்
குப்பச்சிப்பாறையில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி
05-May-2025
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, புதுப்பேட்டை சென்னை சாலையில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில், அக்னி வசந்த மகோத்சவ திருவிழா கடந்த, 12ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் திரவுபதி அம்மனுக்கு சிறப்பு பூஜை, திருமல்வாடி லட்சுமணனின் மகாபாரத விரிவுரை, பழையபேட்டை கவியாளர் பொன்னுசாமியின் மகாபாரத சொற்பொழிவு நடந்து வந்தது.மேலும், அவதானப்பட்டி கலைவாணி நாடக சபா குழுவினர் சார்பில், கிருஷ்ணன் பிறப்பு நாடகம், அம்பாள் திருக்கல்யாணம், பாண்டவர் பிறப்பு, அரக்கு மாளிகை, பக்காசூரனுக்கு சோறு எடுத்தல், திரவுபதி அம்மனுக்கு திருக்கல்யாணம், சுபத்திரை கல்யாணம், சித்திரசேனன் சண்டை, அரவான் சாபம், அர்ச்சுணன் தபசு உள்ளிட்ட இதிகாச, மகாபாரத தெருக்கூத்து கலை நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. முக்கிய நிகழ்வான துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கோவில் முன், 30 அடி நீள துரியோதனன் உருவ பொம்மையை மண்ணால் செய்து, அதில் பீமனும், துரியோதனனும் சண்டையிட்டு, இறுதியில் பீமன் தன் கதாயுதத்தால், துரியோதனின் தொடையில் அடித்து வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, திரவுபதி அம்மனை துரியோதனன் உடல் மீது வைத்து சபதம் நிறைவேறும் வகையில், திரவுபதி கூந்தல் முடிக்கும் நிகழ்வும் நடந்தது. திருநங்கையின் கையால் ஆண்களும், பெண்களும் துடைப்பத்தால் அடிவாங்கி வேண்டுதலை நிறைவேற்றினர். விழாவிற்கான ஏற்பாடுகளை, பாப்பாரப்பட்டி, தொன்னைகான் கொட்டாய், சவுளூர், பாறையூர், தண்டகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஊர்கவுண்டர்கள் செய்திருந்தனர்.
05-May-2025