ஓசூர்: ''தி.மு.க., என்ற தீய சக்தியை அகற்ற வேண்டும்,'' என, ஓசூரில் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், நேற்றிரவு நடந்த என் மண், என் மக்கள் யாத்திரை பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது:தமிழகத்தில் இருந்து, தி.மு.க., என்ற தீய சக்தியை அகற்ற வேண்டும். உதயநிதியை துணை முதல்வராக்க வேண்டும் என ஒரு குரூப் சுற்றி கொண்டிருக்கிறது. பா.ஜ., கட்சியின் பிரசார பீரங்கியாக காங்., மாறியுள்ளது. ஓசூர் தி.மு.க., எம்.எல்.ஏ., பிரகாஷ் கட்டும் வீட்டை பார்த்தேன். அவ்வளவு பெரியதாக உள்ளது. 1,000 கோடி கனிமவளங்கள் கர்நாடகாவிற்கு கடத்தப்பட்டுள்ளது. ஆதி பைரவா புழு மெட்டல் பெயரை, எம்.எல்.ஏ., தரப்பு சஞ்சீவினி புழு மெட்டல் என பெயர் மாற்றியுள்ளது. முதல்வர் ஸ்டாலின் ஹிந்தி கற்று வருவதாக கேள்விப்பட்டேன்.இவ்வாறு பேசினார்.முன்னதாக, ஓசூர் ஜி.ஆர்.டி., சர்க்கிள் பகுதியில் இருந்து புறப்பட்டு, தாலுகா அலுவலக சாலை, நேதாஜி சாலை, பழைய பெங்களூரு சாலை வழியாக பொதுக்கூட்டம் நடந்த ராம்நகருக்கு திறந்த வாகனத்தில் அண்ணாமலை வந்தார். அப்போது நேதாஜி ரோடு ராமர் கோவில் முன், தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில், நாளைய தமிழகத்தை ஆள வேண்டும் என கூறி, சங்கர சக்தானந்த சுவாமிஜி தலைமையில், அண்ணாமலைக்கு பூரண கும்ப மரியாதையுடன் செங்கோல் வழங்கப்பட்டது. சேலம் கோட்ட பொறுப்பாளர் ராமலிங்கம், தமிழக பொறுப்பாளர் ரவி, மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ், மாநில துணைத்தலைவர் நரேந்திரன், முன்னாள் எம்.பி., நரசிம்மன், தொழில்துறை பிரிவு மாநில செயலாளர் ராமலிங்கம், மாவட்ட பொதுச்செயலாளர் அன்பரசன் உட்பட பலர் பங்கேற்றனர்.