கி.கிரியில் சமையல் காஸ் கசிந்து தீ விபத்து தீயணைப்பு துறை ஊழியர், தந்தை படுகாயம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், சமையல் காஸ் கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில், தீயணைப்பு துறை அலுவலக ஊழியர், அவரது தந்தை படுகாயம் அடைந்தனர்.கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியை சேர்ந்தவர் முருகன், 54. இவர், கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலைய அலுவலகத்தில், போக்குவரத்து பிரிவு சிறப்பு நிலை அலுவலராக பணியாற்றி வருகிறார். கடந்த, 6 மாதத்திற்கு முன், கிருஷ்ணகிரி செல்லாண்டி நகரில் வாடகை வீட்டில் குடியேறினார். இவருடன் இவரது தந்தை அருணாசலம், 84, வசிக்கிறார். நேற்று காலை, 6:30 மணியளவில் முருகனின் வீட்டிலிருந்து பயங்கர வெடி சத்தம் கேட்டது.அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தபோது, வீட்டின் மரக்கதவு, ஜன்னல் உடைந்திருந்தது. படுக்கை அறையில் பொருட்கள் எரிந்து கொண்டிருந்தன. முருகன், அவரது தந்தை அருணாசலம் ஆகியோர் பலத்த தீக்காயங்களுடன் கிடந்தனர். இருவரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.போலீசார் கூறுகையில், 'இரவில் படுக்கும்போது, சமையல் காஸ் சிலிண்டரை சரியாக மூடாமல் விட்டிருக்கலாம். இதனால் வீட்டில் காஸ் கசிந்து பரவியுள்ளது. காலையில் எழுந்து லைட்டை போட்டபோது, பயங்கர சத்தத்துடன் வெடித்திருக்கலாம். இதில், காஸ் சிலிண்டர் வெடிக்கவில்லை. வேறேதும் காரணமா என்பது குறித்து விசாரிக்கிறோம்' என்றனர்.