கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து சரிவு 11வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை
கிருஷ்ணகிரி: கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து சரிந்தாலும் வினாடிக்கு, 1,400 கன அடி தண்ணீர் திறப்பால், 11வது நாளாக வெள்ள அபாய எச்-சரிக்கை தொடர்ந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த, 9 நாட்களாக பரவலாக மழை பெய்ததால், ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து கடந்த, 5ம் தேதி முதல், அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதி-கரித்தது. கடந்த, 11ல் அணைக்கு நீர்வரத்து, 7,927 கன அடியாக இருந்தது. அணை நீர்மட்டம் மொத்தமுள்ள, 52 அடியில், 50.55 அடியாக உள்ளதால், அணைக்கு வந்து கொண்டிருந்த தண்ணீர் முழுவதும், தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டிருந்தது. கடந்த, 3 நாட்களாக மாவட்டத்தில் மழையின்றி, நேற்று காலை அணைக்கு நீர்வரத்து, 3,726 கன அடியாகவும், 10:00 மணிக்கு, 1,400 கன அடியாகவும் சரிந்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு, அணை பகுதிக்குள் வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அணைக்கு வந்து கொண்டிருக்கும், 1,400 கன அடி தண்ணீர் முழுவதும், தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளதால், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு, 11வது நாளாக, வெள்ள அபாய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளதாக, நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்-தனர்.