பருவமழை முன்னேற்பாடு பணிகளில் மெத்தனம் ஆவின் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வெள்ளக்காடு
கிருஷ்ணகிரி, அக். 25-தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்றுமுன் தினம் இரவு, கிருஷ்ணகிரியில் அதிகபட்சமாக, 10.2 செ.மீ., அளவிற்கு மழை பெய்தது.இதனால், கிருஷ்ணகிரி அடுத்த பெத்தனப்பள்ளி, தண்டேகுப்பம் பாரிஸ் நகர், டைட்டான் நகர், போகனப்பள்ளி காலனி, கட்டிக்கானப்பள்ளி பெத்தாளப்பள்ளி, அகசிப்பள்ளி மற்றும் நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் புகுந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் முதல், ஆவின் அலுவலகம் வரை, மழைநீர் சூழ்ந்து, குட்டையாக தேங்கி, வெளியேற வழியின்றி உள்ளது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'மழை நீர் கால்வாய்களை துார்வாராமல் இருப்பதால், ஒரு நாள் பெய்த மழைக்கே எங்கள் பகுதியின் நிலைமை இவ்வாறாக உள்ளது. கிருஷ்ணகிரி பாப்பாரப்பட்டி ஏரி நிரம்பி, உபரி நீர் கிட்டம்பட்டி ஏரிக்கு வரும். கிட்டம்பட்டி ஏரி நிரம்பி உபரி நீர் புறம்போக்கு நலம் வழியாக அவதானப்பட்டி ஏரிக்கு செல்லும். கிட்டம்பட்டி ஏரி அருகே, ஆவின் அலுவலகம் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உள்ளன. தற்போது, கிட்டம்பட்டி ஏரி நிரம்பிய நிலையில் உபரி நீர் செல்லும் கால்வாய் துார்வாரப் படவில்லை. இங்கு பல தனியார் நிறுவனங்கள், புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்துள்ளதால், மழை நீர் வடியாமல் தேங்கியுள்ளது. கடந்த முறை இப்பகுதியில் மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார். ஆனால், அதிகாரிகள் மெத்தனமாக இருந்ததால், இன்று ஆவின் அலுவலகமே குட்டைக்குள் என்ற நிலை உள்ளது. அதேபோல பெத்தனப்பள்ளி பஞ்.,ன் பல பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து குட்டை போலவும், தேங்கியுள்ள நீரிலிருந்து வீடுகளுக்குள் பாம்புகளும் வருகின்றன. இது குறித்து பல முறை மனு அளித்தும் தீர்வு இல்லை. மாவட்ட கலெக்டர் நேரடி ஆய்வு செய்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.