வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்2வது நாளாக அகற்றும் பணி
கிருஷ்ணகிரி, டிச. 4- 'பெஞ்சல்' புயலால், கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரத்தில் பெய்த மழையில் பல பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தது. அவற்றை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட பழையபேட்டை, நேதாஜி சாலை, பழைய பஸ் ஸ்டாண்ட், ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளில் நகராட்சி தலைவர் பரிதா நவாப், நகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, தி.மு.க., நகர செயலாளர் நவாப், ஆகியோர் ஆய்வு செய்தனர். தொடர்ந்து சாலைகளில் தேங்கிய நீர் மற்றும் பாதாள சாக்கடை அடைப்பு உள்ளிட்டவை இயந்திரம், நீர் உறிஞ்சும் வாகனம் மூலம் அகற்றப்பட்டது.அதேபோல கணபதி நகரில் நேற்று முன்தினம், 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. அவற்றை அகற்றிய போதும் தொடர்ந்து பெய்த மழையால் வெள்ள நீர் மீண்டும் புகுந்தது. அப்பகுதியில் நேற்றும் மழைநீரை அகற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது மழைநீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். அவர்களிடம் ஓரிரு வாரங்களில் அப்பகுதியில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் துவங்கும். அதன்பின் இப்பிரச்னை வராது என, கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பரிதாநவாப் உறுதியளித்தார்.தொடர்ந்து செட்டியம்பட்டி பகுதியில், வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீரையும் நகராட்சி ஊழியர்கள் அகற்றி, அப்பகுதியிலுள்ள பாதாள சாக்கடைகளின் அடைப்புகளை சரிசெய்தனர். நகராட்சி துப்புரவு அலுவலர் ராமகிருஷ்ணன், நகராட்சி கவுன்சிலர்கள், ஊழியர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.