இடிந்து 2 மாதமாகியும் மீண்டும் கட்டப்படாத ஜி.ஹெச்., காம்பவுண்ட்
ஓசூர்:ஓசூரிலுள்ள தேன்கனிக்கோட்டை சாலையோரம், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை இயங்குகிறது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் வந்து செல்கின்றனர். அரசு மருத்துவமனையில் இருந்து சப்கலெக்டர் அலுவலகம் வரை, தேன்கனிக்கோட்டை சாலையோரம் நெடுஞ்சாலைத்துறை மூலம் ஒருங்கிணைந்த சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில், 1.60 கோடி ரூபாய் மதிப்பில், கழிவு நீர் கால்வாய் மற்றும் சாலை விரிவாக்க பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல், ஓசூர் சப்கலெக்டர் அலுவலகம் முன், ஏரித்தெருவிற்கு திரும்பும் இடத்தில் ஏற்கனவே உள்ள ரவுண்டானாவை இடித்து, சற்று முன்பாக புதிய ரவுண்டானா அமைக்க, நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது. கடந்த பிப்., 23 ல், அரசு மருத்துவமனை முன் புதிய கால்வாய் அமைக்க, ஏற்கனவே இருந்த பழைய கால்வாய் இடித்து அகற்றப்பட்டது. அப்போது, மருத்துவமனையின், 40 மீட்டர் துார காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்தது.இது நடந்து, 2மாதமாகி விட்டன. புதிதாக காம்பவுண்ட் சுவர் அமைக்கும் பணியை பொதுப்பணித்துறை மேற்கொள்ள கூறி, நெடுஞ்சாலைத்துறை தப்பிக் கொண்டது. ஆனால், பொதுப்பணித்துறை புதிய காம்பவுண்ட் சுவர் அமைக்க இதுவரை முயற்சிக்கவில்லை. ஓசூர் அரசு மருத்துவமனை டாக்டர்கள் தரப்பில், மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டது. ஆனால், நிதி ஒதுக்கி அரசு அதிகாரிகள் பணியை மேற்கொள்ளாமல், தனியார் நிறுவனங்களிடம் இருந்து சமூக பொறுப்புணர்வு நிதியை பெற்று (சி.எஸ்.ஆர்) காம்பவுண்ட் சுவர் அமைக்க முயற்சிப்பதாக கூறி, அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருகின்றனர். இதுவரை எந்த நிறுவனமும் காம்பவுண்ட் சுவர் அமைக்க முன்வரவில்லை. இதனால், தனியார் தன்னார்வ அமைப்புகளை நாட, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், 'உடைந்த காம்பவுண்ட் சுவர் வழியாக, சமூக விரோதிகள் மருத்துவமனைக்குள் நுழைந்து விடுகின்றனர். மேலும், நாய்கள் கூட்டம் மருத்துவமனைக்குள் படையெடுக்கின்றன. நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை கண்டுகொள்ளாமல் உள்ளதால், நோயாளிகளுக்கு பாதுகாப்பாற்ற நிலை உள்ளது' என்றனர்.