போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமையில் வாரச்சந்தை கூடும். இன்று பக்ரீத் பண்டிகையையொட்டி, நேற்று போச்சம்பள்ளி வாரச்சந்தைக்கு ஆந்திர மாநிலம், குப்பம், கே.ஜி.எப்., உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும், திருப்பத்துார், தர்மபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் 1,000க்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகள், வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். அதேபோல் சுற்று வட்டார மாவட்டங்கள் மற்றும் உள்ளூர் பகுதியை சேர்ந்தவர்கள் ஆடுகளை வாங்க, அதிகளவு வந்திருந்தனர். விற்பனைக்கு வந்த ஆடுகளில் பொட்டு, மயிலை, நாடு, செம்மறி என பல ரக ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.இதனால், 10 கிலோ எடை கொண்ட ஆடு, 7,000 முதல், 8,000 ரூபாய் வரையும், 20 கிலோ எடை கொண்ட, 14,000 முதல், 16,000 ரூபாய் வரையும், 30 கிலோ எடை கொண்ட செம்மறி ஆடு, 20,000 முதல், 25,000 ரூபாய் வரையும் விற்பனையானது. இதனால் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்த வியாபாரிகள், விவசாயிகள் இரட்டிப்பு மகிழ்ச்சியடைந்தனர். இதனால், போச்சம்பள்ளி வாரச்சந்தையில், 3 கோடி ரூபாய் அளவுக்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.