அரூரில் கொலை வழக்கில் சிக்கிய தொழிலாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
அரூர், தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த சிட்லிங்கை சேர்ந்தவர் விஜயகுமார், 42; கூலி தொழிலாளி. இவர், இரு ஆண்டுகளுக்கு முன், உறவினரான சேலம் மாவட்டம், காக்கம்பாடியை சேர்ந்த வெள்ளச்சி,63, என்பவரிடம், 10,000 ரூபாய் கடன் வாங்கினார். திருப்பி கொடுக்கவில்லை.செப்., 5ல் விஜயகுமார் வீட்டிற்கு வந்த வெள்ளச்சி, ஏழு நாட்களாகியும் வீடு திரும்ப வில்லை. வெள்ளச்சியின் பேத்தி தேவி,24, புகாரின்படி, கோட்டப்பட்டி போலீசார் விசாரித்தனர். இந்நிலையில், செப்,. 15ல் வேலுார் மாவட்டம், பாகாயம் போலீஸ் ஸ்டேஷனில், வெள்ளச்சியை வெட்டி கொன்றதாக, விஜயகுமார் சரணடைந்தார். கோட்டப்பட்டி போலீசார் விஜயகுமாரிடம் விசாரித்து வெள்ளச்சியின் சடலத்தை மீட்டனர். பின், விஜயகுமாரை தர்மபுரி சிறையில் அடைத்தனர்.இந்நிலையில் விஜய குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, தர்மபுரி மாவட்ட எஸ்.பி., மகேஸ்வரன், கலெக்டருக்கு பரிந்துரைத்தார். கலெக்டர் சதீஸ்குமார் இதையேற்று, விஜயகுமாரை குண்டாஸில் கைது செய்ய உத்தரவிட்டார். தொடர்ந்து, கோட்டப்பட்டி போலீசார் தர்மபுரி சிறைக்கு சென்று குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவை சிறைத்துறை அதிகாரிகளிடம் வழங்கினர். இதையடுத்து, சேலம் மத்திய சிறையில் விஜயகுமார் அடைக்கப்பட்டார்.