10 ஊராட்சி ஒன்றியங்களிலும் உயர்கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை
கிருஷ்ணகிரி, நான் முதல்வன் திட்டத்தின் கீழ், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 படித்த மாணவர்கள் அனைவரும், 100 சதவீதம் உயர்கல்வி சேர்க்கையை அடையும் வகையில், மாவட்ட அளவில் உயர்கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை, கலெக்டர் அலுவலக முதல் தளத்தில் செயல்பட்டு வருகிறது.இதை தொடர்ந்து ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும், உயர்கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, வட்டார வள மையத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இக்கட்டுப்பாட்டு அறை மூலம், தொழில்முறை படிப்புகளுக்கு கல்லுாரி மற்றும் பாடப்பிரிவு தேர்வு செய்யலாம். மேலும் உயர் கல்வி பெற இயலாத மாணவர்கள், சான்றிதழ்கள் தேவைப்படும் மாணவர்கள் (ஜாதி சான்றிதழ், இருப்பிடச் சான்று, முதல் பட்டதாரி சான்றிதழ், ஆதார் அட்டை திருத்தம்), உயர் கல்வியில் சேர்க்கையில் ஏற்படும் குறைபாடுகளை களைந்து தீர்வு காணப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, வட்டார வள மையத்தில் உள்ள உயர்கல்வி வழிகாட்டி ஒருங்கிணைப்பாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். அவர்களிடம் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.இத்தகவலை கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.