ரூ.8,000 கோடியில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட விரிவாக்க பணி
கிருஷ்ணகிரி, நவ. 10-''கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்தில், 8,000 கோடி ரூபாய் மதிப்பில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட விரிவாக்க பணிகளை, தமிழக முதல்வர் ஸ்டாலின் விரைவில் துவங்கி வைப்பார்,'' என, அமைச்சர் சக்கரபாணி பேசினார். கிருஷ்ணகிரி மாவட்டம், காட்டிநாயனப்பள்ளி பஞ்., மேல்கரடிகுறி மற்றும் காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி, நடுபையூர் உள்ளிட்ட பகுதிகளில், 2.16 கோடி ரூபாய் மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும், 13.16 லட்சம் ரூபாய் மதிப்பில் முடிவற்ற பணிகள் துவக்க நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் சரயு தலைமை வகித்தார். பர்கூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன் முன்னிலை வகித்தார். உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது: எல்லோருக்கும் எல்லாம் என்ற கொள்கையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆட்சி செய்து வருகிறார். தேர்தலின் போது அறிவித்த வாக்குறுதிகளை கடந்து, பல்வேறு திட்டங்களை தமிழக முதல்வர் நிறைவேற்றி வருகிறார். மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை, தகுதியுள்ள மற்றவர்களுக்கும் விரைவில் கிடைக்கும். தேர்தல் அறிவிப்பில் வெளியாகாத, மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காக்கும் - 48, மகளிர் கடன் உச்சவரம்பு, 60 லட்சம் ரூபாய், காலை சிற்றுண்டி திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை, தமிழக அரசு செய்துள்ளது. தற்போது கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்திற்கு, 8,000 கோடி ரூபாய் மதிப்பில், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் விரிவாக்க திட்டப்பணிகளை, தமிழக முதல்வர் ஸ்டாலின் விரைவில் துவக்கி வைக்க உள்ளார். இவ்வாறு, அவர் பேசினார்.