12 நிமிடத்தில் ஏ.டி.எம்., மிஷினை உடைத்து ரூ.23 லட்சம் கொள்ளை; போலீசார் தகவல்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, 12 நிமிடத்தில் ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து, 23 லட்சம் ரூபாய் கொள்ளையடித்து சென்றவர்களை பிடிக்க, மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரியில், குப்பம் தேசிய நெடுஞ்சாலையில், மாவட்ட ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வி நிறுவனம் எதிரில், எஸ்.பி.ஐ., வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம்., மையம் உள்ளது. அங்கிருந்த இயந்திரத்தை நேற்று முன்தினம் அதிகாலை வெல்டிங் மூலம் உடைத்த மர்மநபர்கள், அதிலிருந்த, பணத்தை கொள்ளையடித்து சென்றனர். மகாராஜகடை போலீசார் விசாரணையில், 23 லட்சம் ரூபாய் வரை கொள்ளை போனது தெரிந்தது. ஏ.டி.எஸ்.பி., சங்கர், டி.எஸ்.பி., முரளி மற்றும் போலீசார் கொண்ட மூன்று தனிப்படை அமைத்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.விசாரணையில், கொள்ளையர்கள் சம்பவ இடத்திற்கு காரில் வந்து, 12 நிமிடத்தில் காஸ் வெல்டிங் வைத்து, பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். காஸ் வெல்டிங் மூலம் வெட்-டும்போது, பணம் எரிந்து விடக்கூடாது என்பதால், குறிப்பிட்ட இடத்தை தேர்ந்தெடுத்து வெட்டியுள்ளனர். கை தேர்ந்தவர்களால் மட்டுமே இதில் ஈடுபட்டிருக்க முடியும் என, போலீசார் தெரிவித்-தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து நடந்த கொள்ளையில், குருபரப்பள்ளியில் கடந்த ஏப்., மாதம், 10 லட்சம் ரூபாயும், ஓசூரில் கடந்த ஜூன் மாதம், 14 லட்சம் ரூபாயும் கொள்ளை போனது. இதேபோல் ஐந்துக்கும் மேற்பட்ட ஏ.டி.எம்., இயந்திரங்களை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது. இதில் தொடர்புடையவர்கள் வட மாநி-லத்தை சேர்ந்தவர்கள் என போலீசார் தெரிவித்தனர். எனவே கிருஷ்ணகிரி ஏ.டி.எம்., கொள்ளையிலும், இதே கும்பல் ஈடுபட்-டிருக்கலாம் என்ற கோணத்தில் தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.---