உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மேம்பாலத்திற்கு ஆரம்ப கட்ட பணிகள் துவக்கம் போக்குவரத்து நெரிசலில் திணற போகும் ஓசூர்

மேம்பாலத்திற்கு ஆரம்ப கட்ட பணிகள் துவக்கம் போக்குவரத்து நெரிசலில் திணற போகும் ஓசூர்

ஓசூர், ஓசூரில், எந்த முன்னேற்பாடும் செய்யாமல், மேம்பாலத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள் துவங்கப்பட்டுள்ளன. அதனால், நகரம் போக்குவரத்து நெரிசலில் திணற போகிறது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நகரில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க, 2016ம் ஆண்டு, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவுட்டர் ரிங் ரோடு திட்டத்தை அறிவித்தார். தமிழக எல்லையான ஓசூர் ஜூஜூவாடியில் துவங்கி, பேரண்டப்பள்ளி தேசிய நெடுஞ்சாலை வரை, 18.40 கி.மீ., துாரத்துக்கு அவுட்டர் ரிங்ரோடு அமைக்க திட்டமிடப்பட்டது. இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டு, சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின், 320 கோடி ரூபாய் ஒதுக்கினார். இச்சாலை அமைக்க, 11 கிராமங்களில் நில எடுப்பு பணி துவங்கப்பட்டு, 6 கிராமங்களில் முடிந்து விட்டன. 5 கிராமங்களில் மந்த கதியில் நடக்கிறது.இந்த அவுட்டர் ரிங்ரோடு பயன்பாட்டிற்கு வந்தால், தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடந்தாலோ, சாலைமறியல், விபத்து போன்ற சம்பவங்கள் நடந்தாலோ, எளிதாக இச்சாலையில் வாகனங்களை திருப்பி விடலாம். அதுமட்டு மின்றி, கனரக வாகனங்கள் இச்சாலையில் சென்றால், ஓசூர் நகரின் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும். ஆனால், இச்சாலை பணி இதுவரை துவங்குவதாக இல்லை.இந்நிலையில், ஓசூர் பத்தலப்பள்ளி பகுதியில் கட்டப்படும் புதிய பஸ் ஸ்டாண்ட் முன், தேசிய நெடுஞ்சாலையில் உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணி, 37.93 கோடி ரூபாய் மதிப்பில் துவங்கப்பட உள்ளது. ஆரம்ப பணியாக சாலையோரம் மழைநீர் வடிகால் கட்டி வருகின்றனர். இப்பணி முடிந்தவுடன், பாலம் பணிகள் துவங்கி விடும். பத்தலப்பள்ளி பகுதியில் சிப்காட் - 2 அமைந்துள்ளது. ஒரு ஷிப்டிற்கு, 14,000 பேருக்கு மேல் வேலை செய்கின்றனர். இதுதவிர கல்வி நிறுவனங்கள், ஹட்கோ ஸ்டேஷன், பத்தலப்பள்ளி மார்க்கெட் போன்றவை உள்ளன.அதனால், ஏற்கனவே சர்வீஸ் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேம்பால பணிகள் துவங்கும்போது, சர்வீஸ் சாலையில் அனைத்து வாகனங்களும் திருப்பி விடப்படும் என்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படும். அவுட்டர் ரிங்ரோடு பணியை முடித்திருந்தால், அவ்வழியாக பெங்களூரு செல்லும் மற்றும் தமிழகம் நோக்கி வரும் கனரக வாகனங்களை திருப்பி விட்டிருக்கலாம்.பத்தலப்பள்ளி பகுதியில் போக்குவரத்து நெரிசலின்றி மேம்பாலம் பணியை துவங்கியிருக்க முடியும். ஆனால், பத்தலப்பள்ளியில் எந்த முன்னேற்பாடும் செய்யாமல், உயர்மட்ட பாலம் கட்டும் பணி விரைவில் துவங்க உள்ளது. அதனால் ஏற்கனவே போக்குவரத்து நெரிசலில் தத்தளிக்கும் ஓசூர், மேலும் இரு ஆண்டுக்கு நெரிசலில் தத்தளிக்க போகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை