உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஓசூருக்கு போலீஸ் கமிஷனர் நியமிக்க அரசுக்கு ஐ.என்.டி.யு.சி., வலியுறுத்தல்

ஓசூருக்கு போலீஸ் கமிஷனர் நியமிக்க அரசுக்கு ஐ.என்.டி.யு.சி., வலியுறுத்தல்

ஓசூர் :'ஓசூருக்கு போலீஸ் கமிஷனரை நியமிக்க வேண்டும்' என, ஐ.என்.டி.யு.சி., தேசிய செயலாளரும், ஓசூர் தொகுதி முன்னாள், காங்., - எம்.எல்.ஏ.,வுமான மனோகரன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:அஞ்செட்டியை தனி ஒன்றியமாக அறிவிக்க வேண்டும் என, தமிழக முதல்வர் ஸ்டாலினை கடந்த, 2023 ஜன., 4ல், காங்., மாநில தலைவர் செல்வபெருந்தகையுடன் சென்று சந்தித்து பேசி, மனு வழங்கினேன். தளி, இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரனும் பேசினார். கடந்த, 14ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தந்த முதல்வர் ஸ்டாலின், தளி ஒன்றியத்திலிருந்து பிரித்து, அஞ்செட்டியை தனி ஒன்றியமாக அறிவித்துள்ளார். அதனால், மலைவாழ் மக்களுக்கு அரசின் உதவிகள், தங்கு தடையின்றி கிடைக்கும். ஓசூரிலுள்ள தளி ரயில்வே கேட்டில் மேம்பாலம் கட்ட, தமிழக அரசு, 90 கோடி ரூபாய் வழங்குவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.கடந்த இரு மாதங்களுக்கு முன், டில்லியில் மத்திய ரயில்வே அமைச்சரை சந்தித்து, மேம்பாலம் கட்ட மனு வழங்கினோம். உடனடியாக பாலம் அமைக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை - பெங்களூரு, தர்மபுரி - நெரலுார் மற்றும் சாட்டிலைட் டவுன் ரிங்ரோட்டை இணைக்கும் வகையில் ரிங்ரோடு, ஓசூர் புதிய புஸ் ஸ்டாண்ட் அருகே மேம்பாலம் ஆகியவற்றை முதல்வர் அறிவித்துள்ளார். இதற்கு வரவேற்பபை தெரிவிக்கிறோம்.கடந்த, 2017ல், ஓசூரை மாநகராட்சியாக முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்தார். ஆனால் வளர்ச்சி பணிகள் ஏதும் நடக்கவில்லை. திறமை வாய்ந்த ஒரு கமிஷனரை, ஓசூர் மாநகராட்சி கமிஷனராக நியமிக்க வேண்டும். சட்டம், ஒழுங்கை பாதுகாக்க போலீஸ் கமிஷனரை நியமிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் ‍தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !