| ADDED : ஆக 11, 2011 02:30 AM
ஓசூர் : ஓசூர் தாலுகாவில் திருந்திய நெல் சாகுபடியில் மகசூலை அதிகரிக்க 11 புதிய தொழில்நுட்பங்களை வேளாண்மை துறை அறிமுகப்படுத்தியுள்ளது. வேளாண் உதவி இயக்குனர் நாகராஜ் வெளியிட்ட அறிக்கை: ஓசூர் தாலுகாவில் சம்பா பருவ நெல் சாகுபடி துவங்கிவிட்டது. விவசாயிகள் நாற்று நடும் பணியில் ஆர்வமாக ஈடுப்பட்டுள்ளனர். வேளாண் துறையின் மூலம் திருந்திய நெல் சாகுபடி முறைகள் குறித்து கிராம அளவிலான கூட்டங்கள், துண்டுபிரசுரங்கள் ஆகியவை மூலம் விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது.ஒவ்வொரு விவசாயியும் திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பங்களை கடைபிடிக்கும்போது, அதிக மகசூல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக திருந்திய நெல் சாகுபடியில் 11 புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. * தரமான சான்று பெற்ற உயர் விளைச்சல் வீரிய ஓட்டு நெல் ரகங்களை பயன்படுத்த வேண்டும். * ஒரு ஏக்கர் நடவு செய்ய 2 கிலோ விதை எடுத்து கொள்ள வேண்டும். * ஒரு ஏக்கர் நடவு செய்ய 40 சதுர மீட்டர் நாற்றங்கால் அமைக்க வேண்டும். அவற்றின் மீது பாலிதின் விரிப்புகளை பரப்பி சட்டங்களை வைத்து மேட்டுப்பாத்தி அமைத்து அதில் மண் மற்றும் தொழு உரம் நிரப்பி விதைக்க வேண்டும்.* 10 முதல்14 நாட்கள் வயதான நாற்றுகளை வயலில் எடுத்து நடவு செய்ய வேண்டும். * நடவு வயல் துல்லியமாக சமன் செய்யப்பட வேண்டும். * சாகுபடியில் நெல் பயிருக்கு இடைவெளியை சீராக விடுவதற்கு மார்க்கல் கருவியை பயன்படுத்த வேண்டும். * 22.5 செ.மீ., க்கு 25 செ.மீ., இடைவெளியில் நாற்றுகளை வயலில் நடவு செய்ய வேண்டும். * குத்துக்கு ஒரு நாற்று வீதம் நடவு செய்ய வேண்டும். * நீர் மறைய நீர் பாசனம் செய்ய வேண்டும். 2.5 செ.மீ., க்கு அதிகமாக நீர் நிறுத்தக்கூடாது. * கோனோ வீடர் களை எடுக்கும் கருவியை கொண்டு களை எடுக்க வேண்டும். நடவு செய்த 10ம் நாள் முதல் பத்து நாளுக்கு ஒரு முறை நான்கு முறை களை எடுக்க வேண்டும். * இலை வண்ண அட்டையை பயன்படுத்தி தேவையான தழை சத்தினை மேல் உரமாக இட வேண்டும். இந்த தொழில்நுட்பத்தை விவசாயிகள் திருந்தி நெல் சாகுபடியில் முறையில் பயன்படுத்தி அதிக மகசூல் பெற கேட்டு கொள்கிறோம். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.