ஓசூர்: ஓசூர் அருகே பாகலூரில் செயல்படும் இரு ஏ.டி.எம்., மையங்களும் செயல்படாமல் முடங்கி போய் உள்ளதால், பொதுமக்கள், தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகள் பணம் எடுக்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். ஓசூர் அருகேயுள்ள பாகலூரில் விவசாயம் மட்டுமின்றி ஏராளமான தனியார் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் செயல்படுகிறது. வேலைவாய்ப்பு ரீதியாக வெளிமாநிலங்கள், மாவட்டத்தை சேர்ந்த மக்களும் அதிகளவில் வசிக்கின்றனர். இப்பகுதியில் ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர் வங்கி மட்டும் செயல்படுகிறது. மற்ற எந்த வங்கிகளும் செயல்படவில்லை. அதனால், பாகலூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள், தொழிலாளர்கள், வியாபாரிகள் மற்றும் அரசு ஊழியர்கள் ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர் வங்கியில் மட்டுமே வங்கி கணக்கு வைத்துள்ளனர். இந்த வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம்., மையங்கள் வங்கி அருகே ஒன்றும், சர்ஜாபுரம் செல்லும் சாலையில் மற்றொரு ஏ.டி.எம்., மையமும் செயல்படுகிறது. இப்பகுதியில் இந்த ஒரு வங்கி மட்டும் செயல்படுவதால், வங்கியில் காலை முதல் மதியம் வரை வாடிக்கையாளர்கள் அதிகளவில் காணப்படுகிறது. வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க பெரும்பாலான ஏ.டி.எம்., மையங்களை பயன்படுத்துகின்றனர். சமீப காலமாக இந்த ஏ.டி.எம்., மையங்கள் அவ்வப்போது பழுதடைந்து செயல்படாமல் முடங்கி வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக இரு ஏ.டி.எம்., மையங்களும் ஒரே நேரத்தில் பழுதடைந்து செயல்படாமல் உள்ளன. இதனால், அனைத்து தரப்பு பொதுமக்களும் ஏ.டி.எம்., மையங்களில் பணம் எடுக்க முடியாமல் கடும் அவதியடைந்துள்ளனர். பணம் எடுக்க வேண்டுமென்றால், 20 கி.மீ., தொலைவில் உள்ள ஓசூர் பகுதியில் அமைந்துள்ள ஏ.டி.எம்., மையங்களுக்கு வர வேண்டிய உள்ளது. இதனால், பொதுமக்களும் காலம் விரயம் ஏற்படுவதோடு கடும் அலைக்கழிப்புக்கு ஆளாகி வருகிறது. மாவட்டம் நிர்வாகம் வளர்ந்து வரும் பாகலூர் நகரில் கூடுதல் வங்கிகள் துவங்கவும், செயல்படாமல் முடங்கி போன ஏ.டி.எம்., மையங்களை தடையின்றி செயல்படுத்த வங்கி நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.